இந்தாண்டு 35-வது தேசிய சாலை பாதுக்காப்பு வாரம் 11.01.24 முதல் 17.01.24 வரை கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி, நாடகங்கள், பிரசாரங்கள் நடத்திட திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் சரக உதவி ஆணையர்களுக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி, கோட்டை காவல் நிலைய சரகத்தில் திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டது இவ்விழாவினை துவக்கி வைத்து பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாநகர பொதுமக்களில் கல்லூரி மாணவர்கள் அதிகம் உள்ளதாகவும், இதில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்கள் விழிப்புடன் தலைக்கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்றி செல்லுமாறும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசம் அணியாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டு, தங்களது விலைமதிப்பில்லா உயிரை இழந்து வருவதாகவும், வாகன ஒட்டிகள் தங்களது உயிரை காத்து கொள்வதுடன், சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் விலைமதிப்பற்ற உயிரை காக்காவும், சாலை விதிமுறைகளை தவறாது பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும், மாநகரத்தில் விபத்துக்களை அறவே ஒழிக்க திருச்சி மாநகர காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்கள். பின்னர் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கியும் வழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், இவ்விழாவில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள் சார்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு மௌன மொழி நாடகம் (MIME) நடத்தி காண்பிக்கபட்டது. அதனை தொடர்ந்து பிஷப் ஹீபர் பள்ளி, புனித வளனார் பள்ளி, ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி மாணாக்கர்கள் என 200 நபர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சத்திரம் பேருந்து நிலையம் ரகுநாத் ஹோட்டல் அருகில் துவங்கி, அண்ணாசிலை, பெரியசாமி டவர் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் ரகுநாத் ஹோட்டல் அருகில் முடிவடைந்தது. மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துக்கொண்டார்கள். இப்பேரணியில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு மண்டலம், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி பேசியதாவது: திருச்சி மாநகர பகுதிகளில் விபத்துகளை குறைக்க காவல்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது அந்த பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் குறிப்பாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தி விபத்துகளை தடுப்பது காவல்துறையின் நோக்கம் என்றார். திருச்சி மாநகரில் சென்ற வருடம் 158 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது அதில் 165 பேர் உயிரிழந்துள்ளார்கள் இதன் மூலம் 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023 ஆம் ஆண்டு 10% அதிகமாக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டியதன் காரணமாக அதிக விபத்து ஏற்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் அதி வேகமாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்களை மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள் இருப்பினும் அதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக மாணவர்கள் பின்பற்றி விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.