திருச்சி மாநகராட்சி மொத்தம் 167.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இதில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்ற பொறுப்பாளர்கள் அதிகாரிகள் மூலம் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசு நிதி பெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது. மந்தகதியில் நடந்து வந்த பணியால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகினர். இதில் திமுக அரசு அமைந்தவுடன் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் திருச்சி மாநகராட்சியில் மந்த கதியில் நடந்து வந்த பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. விரைந்து பணிகள் முடிக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தும், பணிகள் மீண்டும் மந்தமான நிலையில் தான் நடந்து வருகிறது என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


 






 


திருச்சி மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்டுள்ள புதைவடிகால் பணிகள் முடிந்த பிறகு குழிகளை உடனே அடைக்க வேண்டும் என , சமூக ஆர்வலர்களும் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கில் செயல்படுவதால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதை வடிகால் பணிகள் விரைந்து முடிக்கப்படாத நிலையில், அங்கு மிகவும் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. மழை காரணமாக அவற்றில் தண்ணீா் தேங்கி வருகிறது. 




இதனால் பழைய குழாய்கள் உடைந்து அல்லது கசிந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதாரமற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் உறையூர் பகுதிகளில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு 30க்கும் மேற்பட்டோர்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்புகள், வயிற்று வலி உபாதைகளும் ஏற்பட்டது. இந்த நிலை தற்போது மாநகராட்சியில் பல பகுதிகளில் தொடர்ந்து வருகிறது.


 






 


திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதி இல்லை மக்கள் குற்றச்சாட்டு :


திருச்சி மாநகராட்சிக்கு  உட்பட்ட 49வது வார்டில் வசிக்கும் 5, 000 பொது மக்களுக்கு போதிய அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது, இதனை தொடர்ந்து நேரடியாக கள ஆய்வுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் கேட்டபோது  அவர்கள் கூறியது... திருச்சி மாநகராட்சி 49 வது வார்டில் உள்ள பொதுமக்களுக்கு போதிய சாக்கடை வசதிகள் இல்லை,  சிறிது நேரம் பெய்யும் மழையிலேயே சாக்கடை கழிவானது வீட்டுக்குள் புகுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக பலமுறை  49- வது வார்டு மாமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். மேலும் அப்பகுதி எம்எல்ஏ இனிகோ இருதய ராஜை மூன்று முறை பார்க்க சென்றோம் பார்க்க முடியாமல், திருப்பி அனுப்பிவிட்டதாகவும் புகார் கூறுகின்றனர். இந்நிலையில்  டெங்கு காய்ச்சல் மற்றும் பலவிதமான நோய் தொற்றுகள் உருவாகும் சூழ்நிலையில் அங்குள்ள குழந்தைக்கு கடந்த 10 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பதாகவும்,  கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதாகவும், எங்களுக்கு விரைவில் சாக்கடையை கட்டிக் கொடுக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 




தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வந்தவர்கள் உங்களுக்கு குடி நீர் வசதி, சாக்கடை வசதி, சாலை வசதி என அனைத்து செய்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் வெற்றி பெற்ற பிறகு எதையும் செய்யவில்லை, நேரில் சென்று கேட்டால்,  சாதாரண கவுன்சிலர் நான் என்ன செய்யமுடியும், நிதி ஒதுக்கிடு செய்யவில்லை, நிதி ஒதுக்கீடு செய்தால் சாக்கடையை சுத்தம் செய்து தருகிறேன் என அக்கறை இல்லாமல் பேசுகிறார். தனது வார்டு மக்களுக்கு எதையும் செய்யாமல் பொய்யான வாக்குறுதிகளை மட்டும் கொடுத்துள்ளார் என வேதனையுடன் தெரிவித்தனர்.