ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம்... அதிரடித்த பதிவுத்துறை தலைவர்
முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் வரிசைக்கட்ட ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் மீது தெரியுங்களா?

திருச்சி: திருச்சி பதிவுத்துறையில் பணியாற்றி வந்த ராமசாமி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி பத்திர பதிவுத்துறை மண்டல துணைத்தலைவராக இருந்தவர் ராமசாமி. இவர் மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை போலியாக பதிவு செய்ய துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் பல குற்றச்சாட்டுக்கள் வரிசைக்கட்டி நிற்க ஓய்வு பெறும் நாளில் ராமசாமியை பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணி பற்றி பார்ப்போம்.

திருச்சி பத்திர பதிவுத்துறை மண்டல துணைத்தலைவராக இருந்த ராமசாமி மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை போலியாக பதிவு செய்ய துணை போனதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்தது. விசாரணையை தொடர்ந்து இந்த விவகாரத்தில் ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அப்புறமென்ன பட்டென்று தலைமறைவான ராமசாமி, முன்ஜாமீன் பெற்றார். அதன்பிறகும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒவ்வொரு குற்றச்சாட்டும் ஒவ்வொரு வகையாக இருந்தது.
தேசிய நெடுஞ்சாலையையொட்டி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு நிலங்களை உறவினர் பெயரில் வாங்கியதாகவும்,ராமசாமி சார்பதிவாளராக இருந்த காலம் முதல் பதிவுத்துறை உதவித்தலைவராக இருந்த காலம் வரை விதிகளை மீறி பத்திரங்களை பதிவு செய்ததாகவும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தது. திருப்பூரில் உதவி ஐ.ஜி.யாக பணியாற்றிய காலத்தில், போலி ரசீது மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று, அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது.
பதிவுத்துறை வட்டாரங்களில் இந்த புகார்கள் வரிசையாக வலம் வந்த நிலையில்தான் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி பதிவுத்துறையில் பணியாற்றி வந்த ராமசாமி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். டிஐஜி ராமசாமி இனி குற்றமற்றவர் என்று நிரூபித்தால் தான், அவருக்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்ககது.
தமிழகத்தில் ஒவ்வொரு பதிவு மாவட்டத்திலும், நிர்வாக பணிக்காக, மாவட்ட பதிவாளர் ஒருவர் உதவி ஐ.ஜி., நிலையில் நியமிக்கப்படுவது வழக்கம். அத்துடன், தணிக்கை பணிக்கு, ஒரு மாவட்ட பதிவாளர் நியமிக்கப்படும் நடைமுறையும் உள்ளது . இதன்படி நிர்வாகப் பணிக்கான மாவட்ட பதிவாளர்கள், புதிய மனைப்பிரிவுகளுக்கு வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும் பதிவாகும், அனைத்து பத்திரங்களையும் ஆய்வு செய்கிறார்கள். நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே மாவட்டத்துக்கு உட்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில், பதிவான பத்திரங்களை ஆய்வு செய்தால் முறைகேடுகள் மறைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே மாவட்டத்துக்கு உட்பட்ட சார் - பதிவாளர் அலுவலகங்களில், பதிவான பத்திரங்களை தணிக்கை செய்வதை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒரு தணிக்கை மாவட்ட பதிவாளர் பணியிடம் காலியானால், வேறு மாவட்டத்தில் உள்ள, மாவட்ட பதிவாளரை தான், அங்கு கூடுதல் பொறுப்பில் நியமிக்க வேண்டும். தற்போது, நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே மாவட்டத்தில் தணிக்கை பணிக்கு, கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், அதே பகுதியில் தணிக்கையில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பான உத்தரவுகளை, டி.ஐ.ஜி.,க்கள் பிறப்பிக்கவும் கூடாது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






















