திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களின் வாழ்வாதாரங்களையும், இயற்கை வளங்களை, பாதுகாக்க வன உரிமை சட்டம் 2006 முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் ஒருங்கிணைப்பாளர்  செல்வராஜ், மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் மாநில மாநாடு நடைபெற்றது. வன உரிமை அங்கீகார சட்டம் 2006 விதிகள் 2007, 2012 முறையாக முழுமையாக அமல்படுத்த வேண்டும். மார்ச் மாதம் 2023 அரசின் கணக்குப்படி 37, 461 உரிமை கோரல் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், இதில் தனிநபர்கள் உரிமை கோரல்கள், 34,877 எனவும் சமூக உரிமை கோரல்கள் 11,067 என குறிப்பிடுகின்றனர். இதில் தனி நபருக்கு 10,536 உரிமைகளும், 531 சமூக உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றது. பல உரிமைக் குரல்களுக்கு எந்த பதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் இருந்து வரவில்லை. மேலே கொடுக்கப்பட்டுள்ள உரிமை கோரல்களும், முறையாக முழுமையாக கொடுக்கப்படவில்லை. இதில் ஏராளமான சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெற்றுள்ளது.


வன உரிமை சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட வேண்டும். தமிழ்நாட்டின் அரசின் புள்ளி விவரம்படி 15,82,693 ஹெக்டர் காடுகள் என்று சொல்லப்படும் பகுதி வனம் சார்ந்த மக்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். மேலும் வன உரிமை சட்டம் ஆதிவாசிகளுக்கு மட்டும் தான் என சட்ட விரோத பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வனம் என்று அறிவிக்கப்பட்ட அனைத்து பகுதியில் வாழும் வனம் சார்ந்து, வாழும் மக்கள் மீனவர்கள், விவசாயிகள் அனைவருக்கும் சட்டத்தின் படி உரிமை கொடுக்கப்பட வேண்டும்.




மேலும் இச்சட்டத்தின் மூலம் மட்டுமே பணம் சார்ந்து வாழும் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க முடியும். மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரமாக இருக்கும் கடற்கரை, கடல், நிலப்பகுதி அலையாத்திக் காடுகள் பெரும்பாலான இடங்களில் காப்பு காடாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இங்கு வாழும் அனைத்து பாரம்பரிய மீனவர்களுக்கு வன உரிமை அங்கீகாரம் சட்டம் 2006 முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு இந்த பகுதியின் கடல், கடற்கரை, நிலப்பகுதி ,அலையாத்தி காடுகள் ,மீன் வளங்கள், கடல் பாசிகள், உயிரினங்கள் பாதுகாத்து பயன்படுத்தி வன உரிமை சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் வனத்துறையினர் கொடைக்கானல் மலை, நீலகிரி, மசனகுடி, கன்னியாகுமரி, ஈரோடு, சத்தியமங்கலம், கோயம்புத்தூர் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் ஏராளமான சட்டவிரோத வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவது தடுத்து நிறுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 




முதுமலை புலிகள் காப்பகத்தில் பராபரியமாக வாழும் ஆதிவாசி இனத்தவர்களையும் (ST) செட்டி MBC குடும்பங்களை சேர்ந்த 2000 குடும்பங்கள் அங்கு இருந்து வெளியேற்றி மறுவாழ்வு கொடுக்கிறோம் என ஐயங்கொல்லி, சன்னக்கொல்லி  என்ற இடத்தில் விடப்பட்டுள்ளனர். இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பல கோடிகளை ஒரு சில வனத்துறை அதிகாரிகளும், தரர்களும் சேர்ந்து ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். ஆகையால் உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதோடு வன உரிமை சட்டம் 2006 மற்றும் வனவிலங்கு திருத்த சட்டம் 2006 மறுவாழ்வு முறையாக செய்யப்பட்டு பட்டினி கிடக்கும் மக்களை காப்பாற்ற வேண்டும்.  மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மலை மாடுகள் பாரம்பரியமாக வளர்ப்பதோடு இதுவே இவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே அனைத்து சட்டங்களிலும் மேய்ச்சலுக்கு பாரம்பரிய உரிமை இருப்பதை சுயநல தனிநபர்கள் நீதி மன்றம் சென்று சட்டவிரோத உத்தரவுகளையும் கொண்டு வந்து இருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவுகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக வன உரிமை சட்டம் படி மேச்சலை நம்பி இருக்கும் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும். குறிப்பாக 1980 வனச் சட்டத்தில் திருத்தம் செய்வது ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.