திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து சத்திரபட்டி, கே.பெரியபட்டி, சித்தானத்தம், ஆலம்பட்டி புதூர் வழியாக திருச்சி நோக்கி தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மாலை நேரத்தில் இந்த அரசு பேருந்தில் அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை அரசு பேருந்து மணப்பாறையில் இருந்து புறப்பட்டது. அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பேருந்தில்  சென்றனர். கே.பெரியபட்டி அருகே சத்திரபட்டி என்ற இடத்தில் சென்றபோது திடீரென வலதுபுறம் சென்று சாலையோரத்தில் தண்ணீர் செல்லும் வாய்க்கால் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதனால் பேருந்தில்  இருந்தவர்கள் அலறினர்.


இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் வடக்கு சேர்பட்டியைச் சேர்ந்த மகாலெட்சுமி(வயது 16), தேவிகா(16), நாகலெட்சுமி(17), சுவேதா(16), பிரியதர்ஷினி(17), துர்காதேவி(17), சத்திரபட்டியை சேர்ந்த சாலினி(12), மதுமிதா(16), அகஸ்தியா(17), சித்தானத்தத்தை சேர்ந்த காமாட்சி, சித்திக், பஸ் டிரைவர் அம்மாசத்திரத்தை சேர்ந்த நல்லதம்பி என மாணவ, மாணவிகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த அக்கம், பக்கத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர்.




மேலும் பல மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று கதறி அழுதபடி ஓடி வந்தனர். மேலும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே, திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கே.பெரியபட்டி பிரிவு சாலையில் இருந்து புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலையின் அகலம் போதுமானதாக இல்லை. இருபுறங்களிலும் இருசக்கர வாகனத்தை நிறுத்தினால் கூட விழும் அளவிற்கு மண் இறங்கி விடுகிறது. ஆகவே இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று கூறி, மறியலில் ஈடுபட்டவர்களை ஓரமாக அழைத்துச் சென்றனர்.


பின்னர் வாகனங்கள் செல்லத் தொடங்கின. சிறிது நேரத்தில் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை தாசில்தார் தனலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் கவிதா மற்றும் வருவாய்த்துறையினர், போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது பற்றி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சாலையை அகலப்படுத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.