திருச்சி அருகே முக்கொம்பில் சுற்றுலா மையம் உள்ளது. மேலும் முக்கொம்பு காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜின் மகன் லோகேஷ்(வயது 20). இவர் திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவத்தை சேர்ந்த செந்தில்முருகனின் மகன் ஜனார்த்தனன்(20) என்பவரும், அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

 

காவிரியில் மூழ்கிய மாணவர்கள்:

 

இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் விடுதியில் தங்கியிருப்பவர்களில் 14 மாணவர்கள் சேர்ந்து முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றனர். அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, மதிய நேரத்தில் காவிரி ஆற்றில் குளித்தனர். ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்லும் நிலையில், அனைவரும் 2-வது மதகு பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் திருப்பராய்த்துறை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த நிகேஷ் என்பவர் குளித்து கொண்டிருந்தார்.

 

அப்போது ஆற்றில் குளித்த மாணவர்களில் லோகேஷ், ஜனார்த்தனன் உள்பட 4 பேர் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த நிகேஷ், உடனடியாக சுதாரித்துக்கொண்டு 2 பேரை காப்பாற்றினார். ஆனால் லோகேஷ், ஜனார்த்தனன் ஆகியோரை மீட்க முடியவில்லை. இதனால் அவர் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அதைக்கேட்டு கரையில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி வருவதற்குள் லோகேஷ், ஜனார்த்தனன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர்.

 



 

உயிரிழந்த மாணவர்கள்:

 

இதனை தொடர்ந்து அவர்களை தண்ணீரில் தேடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்காததால் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுமூலம் ஆற்றில் மூழ்கிய 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஜனார்த்தனனை சடலமாக மீட்டனர். அவரது உடலை கண்டு, அவருடன் வந்த கல்லூரி மாணவர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய செய்வதாக இருந்தது.

 

பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லோகேஷை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக தேடினர். ஆனால் ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் தேடியும் லோகேஷ் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் முக்கொம்பு அருகில் உள்ள திண்டுக்கரை பகுதி காவிரி ஆற்றில் ஒருவரது பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டதில் இறந்து கிடந்தது லோகேஷ் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லோகேஷின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.