திருச்சி மாநகர் காவல்துறை ஆணையராக காமினி அவர்கள் பொறுப்பேற்றிலிருந்து, தொடர் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சட்டத்திற்கு புறம்பாக போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் திருச்சி மாநகரில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. திருட்டு, கொலை சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக தனிப்படைகள் அமைத்து ஒவ்வொரு பகுதிகளிலும் 24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்து தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள். அதன்படி, கடந்த 11.08.23-ந்தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலை ரெயில்வே மைதானம் அருகில் ஒருவர் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டு பணம் பறிக்கும் குற்றங்களில் ஈடுபடுவதாக பெறப்பட்ட தகவலின்பேரில் அரியமங்கலம், மேலஅம்பிகாபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (எ) குட்டை பாலு (எ) பாலு வயது 37, த.பெ.தங்கராஜ் என்பவர் மீது நாட்டு வெடிகுண்டு வைத்தருந்த குற்றத்திற்காகவும், வழிப்பறி செய்த குற்றத்திற்காகவும், வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரவுடி பாலசுப்ரமணியன் (எ) குட்டை பாலு (எ) பாலு என்பவர் மீது அரியமங்கலம் காவல்நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றதாக ஒரு வழக்கும், சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தெரியவந்தது. எனவே, ரவுடி பாலசுப்ரமணியன் (எ) குட்டை பாலு (எ) பாலு என்பவர் தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருக்கும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விசாரணையில் தெரியவந்ததால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.