அதிரடி! திருச்சி விமான நிலையம் புதிய சாதனை: 22 லட்சம் பயணிகள் பயணம்!
சர்வதேச வழித்தடங்களைப் பொறுத்தவரை, யாழ்ப்பாணம், பாங்காக் மற்றும் ஹோசிமின் சிட்டி போன்ற நகரங்களுக்குப் புதிய சேவைகள் தொடங்கப்பட்டன.

தஞ்சாவூர்: திருச்சி சர்வதேச விமான நிலையம் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2025-26 நிதியாண்டில் 22 லட்சம் பயணிகள் பயணம் செய்து மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
திருச்சி சர்வதேச விமான நிலையம் தனது வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத வகையில், 2025-26 நிதியாண்டில் 2.2 மில்லியன் (22 லட்சம்) பயணிகளைக் கையாண்டு ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. முதல்முறையாக இரண்டு மில்லியன் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளதோடு, சரக்கு கையாளுதலிலும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவிய போர்ச் சூழல் மற்றும் சில தனியார் விமான நிறுவனங்களின் சேவை மாற்றங்கள் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், இந்த அகில இந்திய அளவிலான வளர்ச்சி திருச்சியின் முக்கியத்துவத்தை உலகின் பார்வையை தஞ்சை பக்கம் திருப்பியுள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) புள்ளிவிவரப்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் 1.9 மில்லியன் பயணிகள் பயணம் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது புதிய ஒருங்கிணைந்த முனையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டதுடன், பயணிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் 20-ம் தேதியன்றே இரண்டு மில்லியன் என்ற இலக்கை விமான நிலையம் எட்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச வழித்தடங்களைப் பொறுத்தவரை, யாழ்ப்பாணம், பாங்காக் மற்றும் ஹோசிமின் சிட்டி போன்ற நகரங்களுக்குப் புதிய சேவைகள் தொடங்கப்பட்டன. இடையில் சில சேவைகள் நிறுத்தப்பட்டாலும், யாழ்ப்பாணத்திற்கான சேவை தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் வழித்தடங்களில் விமான இருக்கைகள் முழுமையாக நிரம்பி வழிவது, சர்வதேசப் பயணிகளின் எண்ணிக்கையைச் சீராக வைத்திருக்கப் பெரிதும் உதவியுள்ளது.
திருச்சி விமான நிலையத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் உள்நாட்டுப் போக்குவரத்து மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. கடந்த ஆண்டை விட 48 சதவீத வளர்ச்சியை உள்நாட்டுச் சேவைகள் பதிவு செய்துள்ளன. முக்கியமாக புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொச்சி போன்ற பெருநகரங்களுக்குப் புதிய மற்றும் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டதே இதற்கு முதன்மைக் காரணமாகும்.
இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவருமான துரை வைகோ கூறுகையில், "திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போக்குவரத்தை ஒருங்கிணைத்தது இந்தச் சாதனைக்கு அடிப்படையான ஒன்றாகும். இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் கூடுதல் உள்நாட்டுச் சேவைகளை இயக்க வலியுறுத்தப்பட்டது, அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சரக்கு போக்குவரத்திலும் திருச்சி விமான நிலையம் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்பதும் முக்கியமான ஒன்றாகும். கடந்த நிதியாண்டில் 6,480 டன்களாக இருந்த சரக்கு கையாளுதல், தற்போது 11 சதவீத வளர்ச்சியைப் பெற்று 7,184 டன்களாக உயர்ந்துள்ளது. ஒரு மெட்ரோ அல்லாத விமான நிலையம் 7,000 டன் என்ற அளவைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும். இதுவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.
வளைகுடா நாடுகளின் போர் சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்று நகரங்களுக்கான விமானச் சேவைகள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தடைபடாமல் இருந்திருந்தால், இந்த இலக்கை இன்னும் முன்னரே திருச்சி எட்டியிருக்க முடியும். சரக்கு போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், பழைய முனையத்தை முழுமையாகச் சரக்கு கையாளுதல் மற்றும் அது சார்ந்த விமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தும் திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















