திருச்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல பல மாவட்டங்களிலிருந்து வருபவர்கள், வெளிமாநிலத்தினர், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் திருச்சியில் தவறாமல் செல்ல நினைக்கும் இடங்களில் மலைக்கோட்டை ஒன்று என்றால், மெயின்கார்டு கேட்டுக்கு எதிரில் உள்ள மைக்கேல் அண்டு சன்ஸ் ஐஸ்கிரீம் கடையும் ஒன்று. சுத்தமான கறவைப் பாலில், எந்தச் செயற்கை ரசாயனங்களும் இல்லாத வகையில் குழந்தைகளுக்குத் தரும் வகையில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமுக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கூடவே இந்த ஐஸ்கிரீமின் விலையும் ரசிகர்களைத் தன் பக்கம் இழுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம், குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 15 ரூபாய்க்குள்ளாகவே முடிந்துவிடுகிறது ஐஸ்கிரீமின் விலை. இப்படி பிரபலமான கடை திருச்சியில் மட்டும் 3 கிளைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தலைமை தபால் நிலையம் எதிரே இயங்கிய கடையில் சுகாதாரம் இல்லை என உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 



 

இந்நிலையில் திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்டு கேட்டில் இயங்கி வரும் இந்த  ஐஸ்கிரீம் கடையில் ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கியுள்ளார். அப்போது அந்த ஐஸ்கிரீமில் பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து அளித்த புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு அந்த ஐஸ்கிரீம் கடையில் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடை மிகவும் சுகாதாரமற்ற முறையிலும் கிருமி தொற்று ஏற்படும் வகையிலும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடையின் விற்பனை, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அந்த கடையில் 2 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மேலும், பொதுமக்கள் இதுபோன்று உணவு கலப்படம் சம்பந்தப்பட்ட புகார்களை 99449 59595, 95859 59595 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண