திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பெரகம்பியை சேர்ந்த விவசாயி சீனிவாசன். கடந்த 2006-ம் ஆண்டு இவர் மீதான அடிதடி வழக்கில் சிறைக்கு அனுப்பாமல் குற்றத்தை குறைத்து பதிவு செய்து போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்க, அப்போதைய சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த செல்வராஜ் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் லஞ்சம் வாங்கியபோது, கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன்  தீர்ப்பு கூறினார். 


 






மேலும், அதில், லஞ்சப்பணம் பெற்ற குற்றத்திற்காக செல்வராஜூக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பிரசன்னவெங்கடேஷ் ஆகியோர் முன்னாள் இன்ஸ்பெக்டர் செல்வராஜை சிறையில் அடைத்தனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண