திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த திருவெள்ளறை குன்னாக்குளத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர் துறையூர் தா.பேட்டை செல்லும் சாலையில் கண்ணனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு லாவண்யா செல்போனையே பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. செல்போனை பார்த்துக்கொண்டிருந்தால் படிப்பு வீணாகிவிடும் என பெற்றோர் லாவண்யாவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் எலிமருந்து தின்று மயங்கி கிடந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிசிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


இதேபோன்று : திருச்சி திருவானைக்காவல் கும்பகோணாத்தான் சாலை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன்(55). இவர் எல்.ஐ.சி.யில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 




இதேபோன்று : சோமரசம்பேட்டை அருகே உள்ள கொய்யாதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது29). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணவேணி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார், இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த லட்சுமணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இதேபோன்று: தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் தேவரப்பம்பட்டி அருகே உள்ள கள்ளிக்குடி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (40). லாரி டிரைவரான இவருக்கு திருமணம் முடிந்து லட்சுமி (40) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனிடையே மாரியப்பன் தனது மனைவியை மிரட்டுவதற்காக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள போவதாக பலமுறை கூறி வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று மாரியப்பன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வயலுக்கு சென்று வீடு திரும்பிய லட்சுமி கணவன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு துறையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050