போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
திருமணம் என்ற வார்த்தையை கூறியே அந்த சிறுமியை தனது காமப்பசிக்கு இரையாக்கி வந்துள்ளார் லால்குடியை அடுத்த அன்பில் பகுதியை சேர்ந்தகொத்தனார் அஜித்குமார்.

தஞ்சாவூர்: காதல் என்ற மாய வலையை வீசி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனாருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது திருச்சி நீதிமன்றம்.
பெண் குழந்தைகளை காதல் என்ற ஆசை வார்த்தை கூறி தங்களின் காமத்திற்கு வடிகாலாக்கி கொள்ளும் காமுகர்களுக்கு திருச்சி கோர்ட் கொடுத்துள்ள தண்டனை ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.. திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). கொத்தனார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமியை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அஜித்குமார் ஏமாற்றி உள்ளார்.
திருமணம் என்ற வார்த்தையை கூறியே அந்த சிறுமியை தனது காமப்பசிக்கு இரையாக்கி வந்துள்ளார் கொத்தனார் அஜித்குமார். தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் இருந்த அந்த 17 வயது சிறுமி எதிர்பாராத விதமாக கர்ப்பமடைந்துள்ளார். இந்த சம்பவம் 2021ம் ஆண்டு நடந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லால்குடி அனைத்து மகளிர் போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். ஜெயந்தி முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையையும், அதற்கு ஆதாரமான மருத்துவ அறிக்கைகளையும், சாட்சிகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து திறமையாக வாதிட்டார். சிறுமியின் வாழ்க்கையைச் சீரழித்த அஜித்குமாருக்கு சட்டத்தின்படி மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும், சாட்சிகளையும் கேட்டறிந்த நீதிபதி ஆர். ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமார் மீதான புகார்கள் அனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பில், 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அஜித்குமாருக்கு ஆயுள் கால சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஒருவேளை இந்த அபராதத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், கூடுதலாக ஒரு வருட காலம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் அஜித்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பெண் குழந்தைகளை தங்களின் காமப்பசிக்கு இரையாக்கும் காமுகர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும், பாடமாகவும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நீதியை நிலைநாட்டிய இந்த தீர்ப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















