திருச்சி மாநகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சியில் சில பகுதிகளில் குடிநீர் பிரச்சனை அவ்வபோது ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.
மேலும் புகார்கள் வரும் பட்சத்தில் அந்தப் பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக திருச்சி மாநகராட்சி முழுவதும் குடிநீர் குழாய்கள் இணைப்பது, சரி செய்வது, புதிய குழாய்கள் பொருத்துவது போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆகையால் வாரந்தோறும் ஒரு சில பகுதிகளில் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் தேக்க தொட்டிகள் மற்றும் நீர்நிலைகளை ஆய்வு செய்து சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும் என மாநகராட்சி பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கலப்படம் கலந்து வருவதாகவும் அதனால் பல்வேறு தொற்றுகள் பரவுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மண்டல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். புகார்கள் உறுதி செய்யும் பகுதிகளில் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் 15 மின் மோட்டார் பறிமுதல் - மாநகராட்சி ஆணையர்
இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் ஒரு சில பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் பலர் சட்டவிரோதமாக மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதாக மாநகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தது.
அதன் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் சரவணன் உத்தரவின் பேரில் நேற்று திருச்சி மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 56க்கு உட்பட்ட ராம்ஜி நகர் பகுதியில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று காலை வீடு வீடாகச் சென்று குடிநீர் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது அப்பகுதியில் உள்ள 15 வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் விநியோக குழாயில், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 15 மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது..
மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைக்காமல் போகிறது.
மேலும், தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக வீடு, வணிக குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மாநகராட்சியில் பணிபுரி கூடிய அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற புகார்கள் வராத வண்ணம் பணியாற்ற வேண்டும். மேலும் சட்டவிரோதமான குடிநீரை பயன்படுத்தினால், யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.