திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு சேவைகளாகவும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.50 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேவகி என்ற பயணியிடம் நடத்திய சோதனையில், அவர் தனது உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான 318 கிராம் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தேவகியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 






இந்நிலையில்  துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தபோது விழுப்புரத்தை சேர்ந்த கணேசன் என்ற பயணி தனது உடலில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.32 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான 631 கிராம் தங்கக்கட்டியை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தங்கத்தின் தேவை அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக திருச்சி விமான நிலையத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.




திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல், போதை மாத்திரை கடத்தல், தங்கம் கடத்தல் என்ற நிகழ்வு அரங்கேறி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த விமான நிலைய காவல்துறை உயர் அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து இயல்பாக தங்கம்  கடத்தல் நடைபெற்று வருகிறது .அதில் ஒரு சில பயணிகளிடமிருந்து கோடிக்கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது . திருச்சி விமான நிலையத்தில் என்ன நடக்கிறது? பாதுகாப்புகள் குறைபாடா? கடத்துவதற்கு அதிகாரிகள் துணையா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண