Trichy Airport Expansion: திருச்சி விமான நிலையம் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஓடுபாதையை கொண்டதாக உருவெடுக்க உள்ளது.
திருச்சி விமான நிலையம்:
திருச்சி விமான நிலையம் பயணிகள் போக்குவரத்து அடிப்படையில் நாட்டின் 31வது சிறந்த விமான நிலையமாகவும், வெளிநாடுகளுக்கான விமானங்களை இயக்குவதில் 10வது இடத்திலும் நீடிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக, சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் திருச்சி விமான நிலையம் இரண்டாவது இடத்தில் உள்ளது. நான்கு உள்நாட்டு மற்றும் 10 சர்வதேச இடங்களுடன் நேரடி இணைப்புகளைக் கொண்ட இந்த விமான நிலையத்தில், இரண்டு இந்திய மற்றும் ஐந்து வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சேவையை வழங்கி வருகின்றன. இந்நிலையில் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டம்கடந்த 2009-10ம் ஆண்டில் முன்மொழிப்பட்டது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது அந்த பணி வேகமெடுத்துள்ளது.
512ஏக்கர் நிலம்:
10 ஆண்டுகால பல்வேறு பின்னடைவுகளுக்குப் பிறகு திட்டத்திற்கு தேவையான 512 ஏக்கரில் பாதிக்கும் அதிகமான நிலத்தை அண்மையில் தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி இறுதி செய்தது. அதனை தொடர்ந்து, நிலத்திற்கான சுற்றுச்சுவர் அமைப்பதற்காக இந்திய விமான ஆணையம் 18.6 கோடி ரூபாயை கடந்த ஜனவரி மாதம் ஒதுக்கியது. சுற்றுச் சுவர் கட்டப்பட்டதும், ஓடுபாதை நீட்டிப்புத் திட்டம் முழு வீச்சில் தொடங்க உள்ளது. இதன் மூலம் திருச்சி விமான நிலையமானது விமான மையமாக தரம் உயர உள்ளது.
ராணுவத்துடன் ஒப்பந்தம்:
இந்நிலையில் தான், திருச்சி விமான நிலைய ஓடுதளம் (Runway) மற்றும் விமான நிலைய இதர விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான, ராணுவத்திற்குச் சொந்தமான 166.97 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) தமிழ்நாடு அரசுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. அடுத்த கட்டமாக, 166.97 ஏக்கர் நிலத்திற்கு ஈடான மதிப்புக்கொண்ட இடத்தை மாநில அரசு பாதுகாப்புத்துறைக்கு வழங்க வேண்டும். அதை பாதுகாப்புத்துறை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் விரிவாக்கப் பணிகள் முழு வேகமெடுக்கும்.
தமிழ்நாட்டின் நீளமான ஓடுபாதை:
திருச்சி விமான நிலையத்தில் தற்போது, 8 ஆயிரத்து 136 அடி நீளத்திற்கான ஓடுபாதை உள்ளது. அதனை விரிவாக்கம் செய்து 1.5 கிலோ மீட்டருக்கு நீட்டித்து மாநிலத்திலேயே மிக நீளமான ஓடுபாதை கொண்ட விமான நிலையமாக உருவெடுக்க உள்ளது. இதன் மூலம் அகலமான விமான நிலையங்களும் பயணிக்கும் வகையில், விமான நிலையத்தின் செயல்திறன் மேம்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட இடமானது டாக்ஸிவேயை அமைப்பதற்கும், விமான இயக்கத்தை மேம்படுத்துவதற்கும், திரும்பும் நேரத்தைக் குறைப்பதற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
விமான நிலையத்தின் இதர மேம்பாட்டு பணிகள்:
கூடுதலாக, ரூ.60.7 கோடி செலவில் கட்டப்படும் புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) கோபுரம் மே 2025 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்திற்கு அருகில் அமைந்துள்ள எட்டு தளங்களைக் கொண்ட ATC கட்டிடம் மற்றும் நான்கு தளங்களைக் கொண்ட தொழில்நுட்ப கட்டிட பணிகளும் சீராக நடைபெற்று வருகின்றன. இவற்றால் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய விமானப் போக்குவரத்து மேலாண்மை சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
தொடர்ச்சியான வளர்ச்சி:
திருச்சி விமான நிலையம் விமான இயக்கங்களில் ஆண்டுக்கு ஆண்டு 15% வளர்ச்சியையும், பயணிகள் போக்குவரத்தில் 13% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. செயல்பாடுகளை மேலும் அதிகரிக்க, AAI சரக்கு வளாகத்தை 24/7 சரக்கு கையாளுதலுக்கான வசதியாக நியமிக்க பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் தான் ஜூன் 1 ஆம் தேதி முதல் திருச்சி - ஐதராபாத் மற்றும் திருச்சி - பெங்களூரு ஆகிய விமான சேவைகளுக்கான முன்பதிவை ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதோடு, திருச்சி - கொச்சின் வாரம் இருமுறை சேவையாக மே 2 ஆம் தேதியிலிருந்து தொடங்குவதாகவும் அறிவிப்பு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, திருச்சி - டெல்லி விமான சேவைக்கான கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாக்கத்தின் மூலம் ஆசியாவை கடந்து பல வெளிநாடுகளுக்கும், திருச்சியில் இருந்து நேரடி விமான சேவைகளை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு, விமான நிலைய விரிவாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.