மாநிலம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கவும் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திருச்சி சரகத்தில் பல இடங்களில் தீவிரமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட டன் ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள அப்துல்ரகுமான் மாவு மில்லில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து மாவாகவும், குருணையாகவும் அரைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அங்கு 50 கிலோ எடை கொண்ட 7 சாக்கு மூட்டைகளில் 350 கிலோ ரேஷன் அரிசியும், 50 கிலோ எடை கொண்ட 3 சாக்கு மூட்டைகளில் 150 கிலோ ரேஷன் அரிசியை உடைத்த குருணையும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் குருணையை போலீசார் பறிமுதல் செய்தனர்.




மேலும் தொடர் விசாரணையில், அரியமங்கலத்தை சேர்ந்த சுலைமான் மகன் இஸ்மாயில், மாவு மில் உரிமையாளரான அப்துல்ரகுமானின் மனைவி ரசூல்பீவி, அரியமங்கலத்தை சேர்ந்த பூபதி, சதாம்உசேன், அரியமங்கலத்தை சேர்ந்த அப்துல்லா மகன் இஸ்மாயில் ஆகியோர் ரேஷன் அரிசி மற்றும் குருணையை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து அரைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.  இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ரேஷன் அரிசியை பதுக்கினாலோ, கடத்தல் செய்தாலோ சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண