கடந்த 2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் பல மாநிலங்களில் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை கடந்த வாரம்  தமிழக அரசு வெளியிட்டது. தொடர்ந்து, புதிய அபராத தொகையை வசூலிப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, முதல் முறை விதிமீறலில் ஈடுபடுவோரிடம் ஒரு அபராதமும், அதே விதிமீறலில் 2வது முறை ஈடுபடுவோரிடம் கூடுதல் அபராதமும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், அதே விதிமீறலில் இரண்டாவது முறை ஈடுபடுவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 46 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சீட்பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூலித்து வருகின்றனர். 




இதனை தொடர்ந்து புதிய போக்குவரத்து சட்டம்படி, உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டினால் முன்பு 500 ரூபாயாக இருந்த அபாரதத் தொகை தற்போது 5000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியில் பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினால் தற்போது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதே விதிமீறலை செய்து இரண்டாவது முறை பிடிபட்டால் இனி 10000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் ஓட்டினால், அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும். மேலும் வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படுவதோடு, இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 25000 வரை அபராதமும் விதிக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் முன்பு விதிக்கப்பட்ட 10000 அபராதம் அப்படியே தொடர்கிறது.  மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதும், “வீலிங்” எனப்படும் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டால் 500 ரூபாயாக இருந்த அபராதம் 5000ரூபாயாகவும், அதே விதிமீறலில் 2வது முறை பிடிபட்டால் 10000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்.  கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 1000 அபராதம் வசூலிக்கப்படும். வாகனங்களுக்கு காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் 2000 அபராதம் வசூலிக்கப்படும்.  பதிவு இல்லாத வாகனங்களை ஓட்டினால் 2500 அபராதம். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்தால் 10000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.




இதனிடையே, போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லா திருச்சியை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாநகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி மாநகரில் வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராதத்தொகை நேற்று ஒரே நாளில் சுமார் 150 பேரிடம் வசூலிக்கப்பட்டது. பல இடங்களில் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.