திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியில் இருந்து சென்ற தனியார் பள்ளி வேனும், ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்கோவில் வந்த தனியார் பாலிடெக்னிக் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. திருவானைக்காவலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்கு ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் குறுக்கு சாலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்வோர் வேலைக்கு செல்வோர் என போக்குவரத்து நெரிசல் மிகுந்த அப்பகுதியில் இந்த பள்ளி வேனும் பேருந்தும் மோதிக்கொண்டதால் அருகே இருந்த ஆட்டோ விபத்தில் சிக்கி நசுங்கியது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதி கீழே விழுந்து காயம் அடைந்தனர். தனியார் பாலிடெக்னிக் பேருந்தும், பள்ளி வேனும் மோதிக்கொண்டதில் பத்துக்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும், அனைவரும் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவருடைய குழந்தைகளை வந்து அவர்கள் மருத்துவமனையில் சந்தித்து காயமடையாதவர்களை அழைத்துச் செல்கின்றனர்.
மேலும் விபத்து குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த பகுதிகளில் வாகனங்கள் அனைத்தும் மிக வேகமாக தான் செல்கிறது, இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது என மக்கள் தெரிவித்தனர். போக்குவரத்து காவல்துறையினர் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்