திருச்சியில் பிரதான கடைவீதிகள், சந்தைகளில் பச்சைக்கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவற்றை மீட்க திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், வனச்சரக அலுவலர்கள் கோபிநாத், தினேஷ், உசேன் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திருச்சி மலைக்கோட்டை கடைவீதி, காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக கண்காணித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கரை கீழப்புதூர் குருவிக்காரன் தெருவில் இருந்து தான் பச்சைக்கிளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். இதில் தனிஷ் சகாய ஜென்சி, சாந்தி, மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் தங்களது வீட்டில் விற்பனைக்காக 108 பச்சைக்கிளிகள், 30 முனியாஸ் இன குருவிகள் ஆகியவற்றை கம்பி கூண்டுகளில் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றையும், அவற்றை பிடிக்க பயன்படுத்திய 2 வலைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.




மேலும் பச்சைக்கிளிகள் மற்றும் முனியாஸ் குருவிகளை கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, மேட்டுமருதூர் கிராமத்தை சேர்ந்த திருஞானம் என்பவர் பிடித்து கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருடைய வீட்டுக்கு சென்று சோதனை செய்தபோது, 8 முனியாஸ் குருவிகள் இருந்தன. பின்னர் அவரை கைது செய்த வனத்துறையினர், 8 முனியாஸ் குருவிகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்பட 5 பேரும் திருச்சி ஜே.எம்.-2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் பச்சைக்கிளிகளை விரும்பி வாங்குவதால் குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பச்சைக்கிளிகளை விற்பது, வாங்குவது ஜாமீனில் வர முடியாத வகையில் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இதுகுறித்து தகவல் ஏதும் இருப்பின் வனச்சரக அலுவலரை தொடர்பு கொள்ளவும். தங்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தற்போது மீட்கப்பட்டுள்ள கிளிகளில் பெரும்பாலானவற்றின் இறக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் அவற்றால் உடனடியாக பறக்க முடியாது. இதனால் சில நாட்களுக்கு அவற்றுக்கு உணவளித்து, பராமரித்து இறக்கைகள் வளர்ந்த பிறகு பறக்கவிடப்படும், என்றனர்.