திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் தாலுகா, அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகுபாண்டி. கட்டிட வேலை செய்து வரும் இவரின் மனைவி முத்தாலம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் 2-வது மகள் ஜோகிதா (வயது 18). திருச்சி தென்னூர் பாரதி நகரில் உள்ள தனது அத்தை மகாலட்சுமி (40) வீட்டில் தங்கியிருந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். ஜோதிதாவின் அக்காள் பவித்ராவுக்கு திருமணமாகி, திருச்சியில் உள்ள அவரது அத்தை வீட்டுக்கு அருகே வசித்து வருகிறார். இந்நிலையில் மளிகை கடையில் வேலை செய்து வரும் மகாலட்சுமி நேற்று காலை வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். இதனால் ஜோகிதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை நேரத்தில் அக்காள் பவித்ரா ஜோகிதாவிற்கு போன் செய்துள்ளார். அப்போது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பவித்ரா அத்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கே ஜோகிதா கழுத்து, முதுகு பகுதியில் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி துடித்துள்ளார். இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த மகாலட்சுமி உள்ளிட்ட உறவினர்கள் ஜோகிதாவின் உடலை எடுத்துக்கொண்டு திண்டுக்கல்லுக்கு கிளம்பி உள்ளனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்த பெண்ணின் உடலுடன் உறவினர்கள் திண்டுக்கல் செல்வது குறித்து அறிந்து திடுக்கிட்டு உள்ளனர். பின்னர் அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உடலை திருச்சிக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தி உள்ளனர்.




இதனை தொடர்ந்து உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. உடலை கைப்பற்றிய தில்லைநகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் ஜோகிதாவின் உடலில் காயங்கள் இருந்ததால் இது நிச்சயம் கொலை என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக் தகவல்கள் கிடைத்துள்ளன. ஜோகிதாவிற்கு 18 வயது ஆன நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதல் ஏற்பட்டு உள்ளது. கல்லூரி மாணவரான அவர் காதல் மயக்கத்தால் முதலாம் ஆண்டு பாதியிலேயே கல்லூரி படிப்பை நிறுத்தி உள்ளார். இவர்களின் காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது. அப்போது அவரை அழைத்து அறிவுரை கூறியவர்கள், நீ காதலித்து வரும் அந்த பையன் உனது உறவுக்காரர்தான். உங்கள் இருவருக்கும் அக்காள், தம்பி உறவு முறை என்று கூறி உள்ளனர். இதனால் மனம் நொந்து போன ஜோகிதா, 17 வயது சிறுவனிடம் உறவு முறையை கூறி இனி காதலிக்க வேண்டாம் என்று கூறி உள்ளார். இந்த காதல் விவகாரம் பற்றி கேள்விபட்ட ஜோகிதாவின் பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து வைக்கும் பொருட்டு மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். திருமணமும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜோகிதாவை மறக்க முடியாத நிலைக்கு, தள்ளப்பட்ட அந்த சிறுவன் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து தன்னை விட்டு விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள எப்படி உனக்கு மனம் வந்தது, என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும் வாக்கு வாதம் முற்றவே ஆத்திரத்தில் துப்பட்டாவால் ஜோகிதாவின் கழுத்தை நெரித்து கொன்று கத்தியால் பலமுறை குத்தி விட்டு ஓடி உள்ளார். அந்த சிறுவனை தில்லைநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.