திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக் டர் மா.பிரதீப்குமார் வரவேற்றார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ரூ.79 கோடி மதிப்பீட்டில் 22,716 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நான் திருச்சிக்கு பலமுறை வந்திருக்கிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, எம்.எல்.ஏ.வாக வந்திருக்கிறேன். இப்போது முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் திருச்சிக்கு வருகை தந்திருக்கிறேன். முதல்வருடன் விமான நிலையத்திலிருந்து, விழா நடைபெறும் இடம் வரை வழிநெடுகிலும் மக்கள் வரவேற்கும் வாழ்த்தும், விழாவுக்கு அழைத்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.




மேலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 1987-ல் தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு இயக்கத்துக்கு முதன் முதலாக விதை போட்டார். 1996-ல் மீண்டும் கழக ஆட்சி அமைந்தபோது இந்த திட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் தற்போது நான்கு லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. 2021-22 ல் மட்டும் 16 ஆயிரம் புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மகளிர் திட்டத்திற்கு என தனியாக ஒரு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு அன்னை தெரசா என கலைஞர் பெயர் சூட்டினார். இந்தத் திட்டம் இன்றைக்கு இந்தியாவிற்கு ஒரு முன்னோடி திட்டமாக திகழ்ந்து வருகிறது. தலைவர் துணை முதலமைச்சர் ஆக இருந்தபோது 100 மணி நேரம் நின்று கொண்டு பல லட்சம் மகளிருக்கு சுழல் நிதி கடன் வழங்கினார். அதே போன்று 2021ல் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் 16 லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் ரூ.2,00,800 கோடி சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்தார். இந்த அரசானது பெண்களின் நலன் காக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. இந்த தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.




குறிப்பாக 2021 தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இது சாத்தியமில்லை என்றார்கள். ஆனால் 2021-ல் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு நகர பஸ்களில் கட்டணம் இல்லா பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இன்றைக்கு பெண்கள் 100 கோடி முறை பயணம் செய்து பல லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளார்கள். அதே போன்று புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக மாணவிகளின் மேற்கல்விக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. 2021-22 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு மேலாக ரூ.21,392 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 2023 மார்ச் மாதத்துக்குள் 25 ஆயிரம் கோடி கடன் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சரின் உழைப்பே இந்த இடத்துக்கு அவரை எடுத்துச் சென்றிருக்கிறது. அதேபோன்று சுழல் நிதி கடன் பெறும் நீங்களும் நன்கு உழைத்து வெற்றி பெற வேண்டும். முத்தமிழ் அறிஞரின் பேரனாக இருக்கும் பெருமையை விட, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். பொறுப்பான செல்லப்பிள்ளையாக என்றும் இருப்பேன் என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் இந்த வாய்ப்பினை அளித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.