திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கலையரங்கத்தில் 69 ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் செஞ்சி மஸ்தான், திருச்சி மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார். இந்நிகழ்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: வடகிழக்கு பருவமழையில் சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். எவ்வளவு மழை பெய்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது. சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கால்வாய்கள் வெட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.


 






 


திருச்சி மாவட்டத்தில் நடவுப் பணிகள் முடியும் தருவாயில் யூரியா தட்டுப்பாடு இருப்பதாக சொன்னார்கள். இது தொடர்பாக துறை அமைச்சரிடம் பேசி இருக்கின்றேன். விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு கடன் தர கூட்டுறவுத்துறை அமைச்சரிடமும் பேசி இருக்கின்றேன். அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சம்மட்டி வைத்து அடித்து விட்டதால் காவிரி பாலத்தின் பேரிங் உட்கார்ந்து விட்டது. அதனை மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.




மேலும் இந்த மாதிரியான தொழில்நுட்ப பணிகளை வேகமாக முன்னெடுக்க இயலாது. அதனால் தான் தாமதம் ஏற்படுகிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி அடிப்படை பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் எடுப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கு எதிர்ப்புகள் வந்துள்ளதால் பழைய முறைப்படி பணி நியமனம் செய்ய தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.