திருச்சி: திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே பல மாதங்களாக மந்தமாக நடைபெற்று வந்த புதிய மேம்பாலப் பணிகள் தற்போது சூடுபிடித்துள்ளன. பாலத்தின் முக்கிய கட்டுமானத்துக்கு தேவையான 30 மீட்டர் நீளமுள்ள 8 இரும்பு உத்தரங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பணிகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைவாக கொண்டு செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் நவம்பர் மாதத்துக்குள் ரயில்வே பகுதி பணிகளையும், 2027 ஜனவரிக்குள் ஒட்டுமொத்த பணிகளையும் முடித்து பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி நகரின் மையப்பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றாக கோட்டை ரயில் நிலையம் பகுதி உள்ளது. இப்பகுதியில் இருந்த சுமார் 150 ஆண்டுகள் பழமையான குறுகிய ரயில்வே பாலம் வலுவிழந்ததைத் தொடர்ந்து, புதிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சுமார் ரூ.44 கோடி மதிப்பில் திட்டம் உருவாக்கப்பட்டு, திருச்சி மாநகராட்சி மற்றும் தென்னக ரயில்வே சார்பில் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்டச் செலவு இரு அமைப்புகளாலும் சம அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
புதிய மேம்பாலத்தின் ரயில் தண்டவாளப் பகுதியை ரயில்வே அமைப்பும், பாலத்தின் இருபுறமும் அமைக்கப்படும் அணுகுச்சாலைகளை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகின்றன.
பழைய பாலம் அகற்றப்பட்டு ஓராண்டு நிறைவு
புதிய பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பழைய பாலத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு, 2025 மே மாதத்தில் அந்தப் பாலம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
அதன்பிறகு புதிய பாலத்துக்கான பணிகள் பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை. இதனால், முக்கிய சாலை மூடப்பட்ட நிலையில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்போது கட்டுமானப் பணிகளில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் மீது பொருத்தப்பட வேண்டிய 30 மீட்டர் நீளமுள்ள 8 இரும்பு உத்தரங்கள் கட்டுமானப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால், ரயில்வே தண்டவாளத்தின் மேல் அமைக்கப்படும் பாலத்தின் பிரதான பகுதி பணிகள் விரைவில் அடுத்த கட்டத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நவம்பரில் ரயில்வே பணிகள் முடியும்
உறையூர் பகுதியில் பாலத்துக்கான முக்கிய தாங்கு அமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேயின் கார்டு கேட் பகுதியில் நடைபெற்று வரும் மற்றொரு தாங்கு அமைப்புப் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ரயில்வே தலைமையகத்தின் அனுமதி கிடைத்ததும் இரும்பு உத்தரங்கள் கான்கிரீட் தூண்கள் மீது பொருத்தப்பட உள்ளன. அதன் பின்னர் பாலத்தின் மேற்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்த பணிகள் முடிந்ததும் ரயில்வே பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை வரும் நவம்பர் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அணுகுச்சாலையும் தயாராகிறது
ஒருபுறம் ரயில்வே பகுதியில் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், மறுபுறம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அணுகுச்சாலைகளுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனைத் தொடர்ந்து அணுகுச்சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பணிகளை முடிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து 2027 ஜனவரிக்குள் பாலத்தை திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கரூர் பைபாஸில் தொடரும் நெரிசல்
கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள சாலை மூடப்பட்டதால், அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் கரூர் பைபாஸ் சாலை மற்றும் தென்னூர் மேம்பாலம் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளன.
இதனால் காலை, மாலை அலுவலக நேரங்களில் கரூர் பைபாஸ் உள்ளிட்ட மாற்றுப்பாதைகளில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரின் மையப்பகுதிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் கூடுதல் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாலப் பணிகள் எப்போது முடியும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் வேகம் பெற்றிருப்பது நகர மக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான போக்குவரத்து சிரமத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, திட்டமிட்டபடி ஜனவரிக்குள் கோட்டை மேம்பாலம் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது திருச்சி மக்களிடம் அதிகரித்துள்ளது.
