திருச்சி மாநகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் வாகன நெரிசலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று கால்நூற்றாண்டு காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் பஞ்சப்பூர் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆட்சி மாறிய காரணத்தினால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு முயற்சி மேற்கொண்டார். பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மண் பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முதற்கட்ட பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு ரூ.349.98 கோடிக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் சிவ் தாஸ் மீனா மேற்கண்ட தொகையினை ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளார். உள்கட்டமைப்பு வசதி நிதியிலிருந்து ரூ.140 கோடி, திருச்சி மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.50 கோடி, தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தில் இருந்து ரூ.159.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலமாக ரூ.159 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், ரூ.65.90 கோடியில் டிரக்டெர்மினல், ரூ.40.30 கோடியில் சாலை பணிகள், ரூ.84.78 கோடியில் பல்வகை பயன்பாட்டு முனையம் ஆகியவை அமைக்கப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, பேருந்து நிலையம் அமையும் பஞ்சப்பூர் பகுதியில் மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிக்கச் செய்ய தற்போது 8 அடி ஆழத்துக்கு களிமண்ணை எடுத்து விட்டு கிராவல் மண் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திருச்சி மாநகர வளர்ச்சியின் இன்னொரு மைல்கல்லாக அமையும். நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் நிர்வாக அனுமதி வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மாநகர மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். திருச்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றபட உள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்