திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ராணி மங்கம்மாள் கட்டிடம் உட்பட மத்திய மண்டலத்தில் உள்ள 10 பராம்பரிய கட்டிடங்களை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில்  புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பாதுகாக்கவும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த கோட்டம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, 33 கோடி செலவில் சென்னையில் உள்ள ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தவிர்த்து மாநிலம் முழுவதும் 29 பாரம்பரிய கட்டிடங்களை புனரைமக்க தமிழக அரசு சார்பில் 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




இந்நிலையில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை காரணமாக இந்த பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் புனரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறைத்துறை மீண்டும் தொடங்கி உள்ளது. இதன்படி திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலக புராதான கட்டிடமான ராணி மங்கம்மாள் கட்டடத்தினை மறுசீரமைத்து, புனரமைக்கும் பணி 9.4 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் உதவி பொறியாளர் கண்காணிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய மண்டலத்தில் உள்ள 8 பராம்பரிய கட்டிடங்களை புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வரும் புராதானக் கட்டிடம் 1.46. கோடி செலவிலும், ஆட்சியர் குடியிருப்பாக செயல்பட்டு வரும் புராதான கட்டிடம் ரூ.58.88 லட்சம் செலவிலும், ஆலங்குடியில் தற்போது வட்டாட்சியர் அலுவலம் செயல்பட்டு வரும் புராதானக் கட்டிடம் ரூ.97.46 லட்சம் செலவிலும், திருமயத்தில் தற்போது வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டிம் ரூ.3.43 கோடி செலவிலும், கீரனூரில் தற்போது வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வரும் புராதானக் கட்டிடம் ரூ. 52.68 லட்சம் செலவிலும் புனரமைக்கப்படவுள்ளது.






இதைப்போன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணை கால்வாய் செயற்பொறியாளர் குடியிருப்புபுராதான கட்டிடம் ரூ.1.23 கோடி செலவிலும், தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள மூத்த இளவரசர் குடியிருப்பின் ஒரு பகுதி ரூ.2.45 கோடி செலவிலும், நாகப்பட்டினத்தில் தற்போது மாவட்ட நீதிமன்றம் மற்றும் குற்றவியில் நீதிமன்றம் செயல்பட்டு வரும் புராதான கட்டிடம் ரூ.7.90 கோடி செலவிலும், திருச்சி முதன்மை குற்றவியல் நீதிமன்ற புராதான கட்டிடம் ரூ.1.34 கோடி செலவிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.