தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் கூரையாற்றில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கால் திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம், உறையூர், செல்வ நகர், லிங்கம் நகர், பாத்திமா நகர், ராஜலட்சுமி நகர், பேஸ்கி நகர், தியாகராஜ நகர், மேல பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து கொள்வதும் அங்கு வசிக்கும் மக்கள் பல நாட்கள் அவதிக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும் கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மழைநீர் வடியாததால் இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஒரு வாரத்துக்கும் மேல் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, திருச்சி மாநகரில் இது போன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு உத்தரவிட்டார். குறிப்பாக தொடர் மழையின் போது மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி கிடக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளை கண்டறிந்து, அங்கிருந்து உடனடியாக மழை நீரை வெளியேற்றும் வகையில் மின்மோட்டார்களுடன் கூடிய பம்மிங் ஸ்டேஷனுக்கு அமைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, கடந்து சில ஆண்டுகளாக தொடர் மழையின் போது அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக கோரையாற்று வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அன்பிலார் நகர், டோபி காலனி, துளசிங்க நகர், கிருஷ்ணாபுரம், ராஜீவ் காந்தி நகர் ,துறையூர், பாத்திமா நகர் ,ஆதிநகர் ,ஏ.யு.டி நகர் ஆகிய 7 இடங்களில் மின் மோட்டார்களுடன் கூடிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்தது. "கோரையாற்றில் ஆங்காங்கே உள்ள மதகுகள் முறையாக பராமரிக்கப்படாததால். அவற்றின் வழியாக தண்ணீர் வெளியேறி திருச்சி மாநகரில் கரையோரத்தில் உள்ள சில குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வந்தது.
இதைத் தவிர்க்க கோரையாறு மற்றும் அதை ஒட்டிய இதர வாய்க்கால்காளில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டோம். தொடர்ந்து வெள்ளம் வடிவதற்கு வழி இன்றி இருக்கக்கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்தோம். அதன்படி 7 இடங்களில் தற்போது 20 எச்.பி. திறன் கொண்ட மின் மோட்டார் ஜெனரேட்டர் வசதிகளுடன் கூடிய பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனிவரும் காலங்களில் இப்பகுதிகளில் மழை நீர் தேங்கினால் அடுத்த சில மணி நேரங்களிலேயே மின் மோட்டார்கள் மூலம் அந்த நீரை அருகில் உள்ள வடிகால் வாய்க்கால்களுக்கு கொண்டு சென்று விட முடியும். மேலும் முன்பு போல நாள்கணக்கில் பாதிப்பு இருக்காது. உறையூர் ,எடமலைப்பட்டி புதூர் பகுதி மக்களால் இதன் பலனை நன்கு உணர முடியும்" என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்