புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்த சையது அபுல்ஹாசன் சாதலியின் மகன் சேக் அப்துல்லா (வயது 22). இவர் சீனாவில் ஜியான்ஹனா மாவட்டத்தில் கியூஹார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு கடந்த 2017-ம் ஆண்டு சேர்ந்து படித்தார். அதன்பின் கொரோனா காலகட்டத்தில் சேக் அப்துல்லா சொந்த ஊரான புதுக்கோட்டை திரும்பினார். இங்கிருந்த படியே ஆன்லைனில் படிப்பை தொடர்ந்தார். இந்த நிலையில் 5 ஆண்டுகள் படிப்பு முடிந்த நிலையில் மருத்துவ பயிற்சிக்காகவும், சான்றிதழ் பெறுவதற்காகவும் வருமாறு சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து சேக் அப்துல்லாவை அழைத்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 11-ந் தேதி சேக் அப்துல்லா மீண்டும் சீனா புறப்பட்டு சென்றார். சீனாவில் கொரோனா புதிய வகையான பி.எப். 7 வேகமாக பரவி வருகிற நிலையில், சேக் அப்துல்லாவை கொரோனா பரிசோதனை முடிந்து தனிமைப்படுத்தி உள்ளனர். அதன்பின் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அதே பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் தனது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அவரை மீட்டு சொந்த ஊர் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து கடந்த 26-ந் தேதி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சையது அபுல்ஹாசன் சாதலி மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் அரசுக்கும், தூதரகத்திற்கும் தகவல் தெரிவிப்பதாக கூறினர்.
இந்த நிலையில் சீனாவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சேக் அப்துல்லா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் இருந்து அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்கள் கதறி அழுதனர். சேக் அப்துல்லா இறப்பு குறித்து தகவல் பரவியதும் உறவினர்கள் சையது அபுல்ஹாசன் சாதலியின் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினர். அவரது வீட்டின் முன்பு சோகத்துடன் அமர்ந்திருந்தனர். இதற்கிடையில் இறந்த தனது மகனின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சையது அபுல்ஹாசன் சாதலி மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து,மாணவர் இறப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கையில், சேக் அப்துல்லாவின் உடல்நிலை மோசமாக இருந்ததில் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்டவை பாதிப்படைந்ததால் இறந்ததாக பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததாக அவர்கள் எதுவும் கூறவில்லை. சிகிச்சையில் இருந்த போது பல லட்சம் ரூபாய்களை செலவு செய்துள்ளனர். சொந்த ஊருக்கு உடலை கொண்டு வர 15 நாட்களுக்கு மேல் ஆகும் என அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதைய சூழலில் இறந்தவரின் உடலை கொண்டு வர அனுமதி கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. இதற்கிடையில் உடலை கொண்டு வர பல லட்சம் ரூபாய் ஆகும் என பல்கலைக்கழகம் தரப்பில் கேட்டுள்ளனர். மேலும் அங்கேயே உடலை அடக்கம் செய்யவும், அதனை காணொலி வாயிலாக காண்பிக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இறந்த சேக் அப்துல்லாவின் உடலை சொந்த ஊர் கொண்டு வரவும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.