புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவர் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகளில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல், ஊர் பெயர் பதாகைகள் அமைத்தல், சாலையில் வெள்ளைக் கோடு போடுதல் உள்ளிட்ட பணிகளை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரது பிரதான அலுவலகம் புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 12 ஆம் தேதி  2 கார்களில் திடீரென வந்து இறங்கினர். மேலும் நுழைவுவாயில் கதவை மூடி அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் அலுவலகத்தில் இருந்தவர்களையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அலுவலகத்திற்குள் அதிகாரிகள் புகுந்து ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அலுவலகத்தில் கணக்குகள் சரிபார்க்கும் பிரிவுக்கு சென்றும் சோதனையிட்டனர். அங்கிருந்த ஊழியா்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த சோதனையானது பாண்டிதுரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் புதுக்கோட்டையில் உள்ள பாண்டிதுரையின் அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட  இடங்களில் சோதனையானது நேற்று 3-வது நாளாக நீடித்தது. 




இந்த நிலையில் அரசு ஒப்பந்ததாரர் பாண்டிதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நேரடி விசாரணை நடத்தினர். இதில் பெரியார் நகர் டபுள் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், பணம், நகைகள், கணினி உபகரணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று இரவு நிறைவடைந்தது. பெரியார் நகர் டபுள் ரோட்டில் உள்ள பாண்டிதுரை அலுவலகத்திற்குள் வருமானவரித்துறை அதிகாரிகள் காரில் வந்து சென்றபடி இருந்தனர். மேலும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். சோதனையின் போது ஆவணங்களை கொண்டு செல்வதற்காக அட்டை பெட்டிகள் ஏராளமாக காரில் எடுத்து செல்லப்பட்டன. பின்னர் அந்த ஆவணங்களை வேனில் கொண்டு செல்லப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையால் பாண்டிதுரை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.