புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை இ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 28). இவர் விராலிமலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் இரவு பணி முடிந்து சாலையில் நடந்து செல்லும் போது கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி, கொலுசு, செல்போன்களை மர்மநபர்கள் 3 பேர் பறித்து சென்றனர். மேலும் இதனை வெளியில் சொல்லக்கூடாது என கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுதொடர்பாக விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முருகன் (22), நந்தகுமார் (22), மணிகண்டம் அருகே பூங்குடியை சேர்ந்த ஹேமராஜ் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் முருகன், நந்தகுமாருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஹேமராஜிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பில் அபராத தொகை ரூ.15 லட்சத்தை பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும் எனவும், இந்த தொகையை 3 பேரும் சிறையில் பணி செய்து, அந்த பணியில் 20 சதவீதம் என ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து தீர்ப்பில் மேலும் 3 பேரையும் தனித்தனியாக தனிமை சிறையில் 3 மாதம் அடைக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் தனிமை சிறையில் இருக்க வேண்டும் எனவும், இந்த தண்டனையை 18 மாதத்திற்குள் முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்