புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மங்களநாடு- பாலகிருஷ்ணபுரம், மாத்தூர் ராமசாமிபுரம், தஞ்சாவூர் மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கிடையே வில்லுனி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள அம்பலத்திடல் என்ற இடத்தில் மிகப் பழமையான வாழ்விடம் உள்ளது. இந்த இடத்தினை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகழக நிறுவனர் ஆசிரியர் மணிகண்டன் தலைமையில் அவரது குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 173 ஏக்கர் பரப்பளவில் உள்ள அம்பலத்திடலில் ஆங்காங்கே கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், விரவிக்கிடப்பதும் சுண்ணாம்பு கற்காரைகள் படிந்த இடங்களிலும், புதர்களின் அருகிலும் முதுமக்கள் தாழிகள் புதையுண்டு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அங்கு கிடந்த பானை ஓடுகளின் கழுத்துப் பகுதியில் முக்கோண ஏணி வடிவத்திலான குறியீடுகளும் காணப்பட்டது. மேலும் எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளது. பெரிய சுடுசெங்கல், மண் தரை தளங்களும் காணப்பட்டது. கிடைத்தவைகளை வைத்து ஆய்வாளர்கள் கூறுகையில், வன்னி மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த பகுதி போர்வீரர்களின் வாழ்விடமாகமாகவும், போரில் மடிந்த வீரர்களின் நினைவிடங்களாகவும் இருந்திருக்க வேண்டும்.




மேலும் புதிர் திட்டைகளும் அமைந்திருக்கிறது. சுண்ணாம்பு படிமங்கள் காணப்படுகிறது. இதன் காலம் சுமார் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்க வேண்டும். மேலாய்வில் மேலும் பழமையான கற்கோடரி கண்டெடுக்கப்பட்டது. இந்த பானை ஓடுகளில் உள்ள குறியீடுகள் கிரேக்கம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் ஒரே மாதிரியாக கிடைத்திருப்பதால் தமிழர்கள் உலகமெங்கும் வாழ்ந்த சமூகமாக இருந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது என்றனர். 




மேலும் இளைஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் தேடலில் கிடைத்த பானை ஓடுகள், கற்கோடரி போன்ற பொருட்களை அறந்தாங்கி தாசில்தார் மற்றும் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்து அந்த பொருட்கள் புதுக்கோட்டை அருங்காட்சியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அம்பலத்திடலில் மேலாய்வில் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் இன்றும் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காணலாம். அம்பலத்திடலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பெற்றுக் கொண்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று கூறும் அப்பகுதி இளைஞர்கள் தமிழ்நாடு அரசு அம்பலத்திடல் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்களை கொண்டு அகழாய்வு செய்து புதைந்துகிடக்கும் வரலாறுகளை வெளிக் கொண்டு வரவேண்டும் என்கின்றனர். நீண்ட கால கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண