அரியலூர் மாவட்டம் சூரியமணல் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த பா.ம.க. முன்னாள் மாநில துணை பொது செயலாளர் திருமாவளவன் தலைமையில், நகர செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடையிலிருந்து மதுபாட்டில்களை வெளியில் கொண்டு வந்து வைத்து கடையை பூட்டினர். இதனால் அதிகாரிகளுக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. முன்னாள் மாநில துணை பொதுசெயலாளர் திருமாவளவன் உள்பட 25 பேர் மீது கடை சூப்பர்வைசர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தனி வீடு ரவி என்கின்ற ரவிசங்கர் தலைமையில், மாநில துணைத்தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், வேலுச்சாமி உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க இருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே பா.ம.க.வினர் வந்த 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருச்சி- சிதம்பரம் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் சூரியமணல் கிராமத்தில் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதையடுத்து, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிடம் பா.ம.க. நிர்வாகிகள் மனு அளித்தனர். மேலும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதையிடமும் மனு அளித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்