திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் 1 ஆம்  தேதியில்  பள்ளிகள் திறக்கப்பட உள்ள  பள்ளிகளில் பணியாற்றும் 91.5 சதவீத ஆசிரியர்களுக்கும், 86 சதவீத ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி  செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகள் வரும் செப்டம்பர் முதல் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு, 9 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள், பணியாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.




அதன் படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான  540 பள்ளிகள் வரும் செப்டம்பர் முதல் தேதி திறக்கப்பட உள்ளன. இதில் 224 அரசு பள்ளிகளில் 3,675 ஆசிரியர்களும், 206 தனியார் பள்ளிகளில் 4,473 ஆசிரியர்களும், 110 உதவி பெறும் பள்ளிகளில் 2,312 ஆசிரியர்களும், என்று மொத்தம் 10 ஆயிரத்து 460 ஆசிரியர்களும், 1,773 ஆசிரியரல்லாத பணியாளர்களும், பணியாற்றுகின்றனர். இதில் 9 ஆயிரத்து 400 ஆசிரியர்களும், 1,480 பணியாளர்களும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 557 ஆசிரியர்கள், 1,162 பணியாளர்களும், 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். இதன்படி திருச்சி மாவட்டத்தில் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 91.5 சதவீதம் ஆசிரியர்களும், பணியாளர்களின் 86 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இன்னும் 876 ஆசிரியர்கள், 241 பணியாளர்கள், தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. மேலும் 184 ஆசிரியர்கள், 52 பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கபட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.




தமிழகத்தில் பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக எடுத்து வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள், சமூக இடைவெளியில் அமர்ந்து பாடங்களை கற்கும் வகையிலும், கைகளை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு வகுப்பறையிலும் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுழற்சி முறையில் மாணவர்கள்  பாதுகாப்பான முறையில் கல்வி பயில வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக எடுத்து வருகிறது. பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும், கொரோனா  தடுப்பூசி செலுத்தும் திட்டம், மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி  செலுத்துவதற்கு சிறப்பு முகாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.