தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தபட்டு இருந்தது. அதேநேரத்தில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் கஞ்சா, போலி மதுபானம், கள்ளச்சாராயம் போன்ற போதைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனையானது. இத்னால இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை தடுக்கும் பொருட்டு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கள்ளச்சாராயத்தையும், கஞ்சா விற்பனையும் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டார்.  இதன்படி திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உல்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதனப்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க மதுவிலக்கு பிரிவு காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குடுமியான்மலை வண்ணாரப்பட்டி, சீவகம்பட்டி, கவிநாரிப்பட்டி பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.



இதனை தொடர்ந்து  வண்ணாரப்பட்டி அர்ச்சுனன்குளம் அருகில் முற்புதர்களில் சாராயம் காய்ச்சுவதற்கான மூலப்பொருட்கள் கொண்ட வெல்லம், பேரீச்சம் பழம், கடுக்காய் வசம்பு, அழுகிய பழங்கள் போடப்பட்ட சாராய ஊறல்கள் 7 பேரல்களில் இருந்ததை கண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கூடுதல் காவல் சூப்பிரண்டு செரீனா பேகம் மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அதில் ஊருக்கு ஒதுக்குப்புறமான  இடத்தில் சாராய ஊறல்கள் மொத்தம் 2 ஆயிரத்து 300 லிட்டர் அளவில் இருந்தது. மேலும் 10 லிட்டர் சாராயம் காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மதுவிலக்குபிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



மேலும் கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவது பழக்கம் குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கி உள்ளது. மதுபானங்களின் விலை உயர்வால் சாராயம் காய்ச்சும் நபர்கள் மீண்டும் காய்ச்ச தொடங்கி விட்டனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அன்னவாசல் அருகே உள்ள விருமாங்குளம் பகுதியில் அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விருமாங்குளம் பகுதியில் போடப்பட்டிருந்த 1,800 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர்  கண்டுபிடித்து தரையில் ஊற்றி அழித்தனர். இதுகுறித்து அன்னவாசல் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.