அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டில் தனியாக இருப்பவர்களிடம் பணம், நகை கொள்ளை அடிப்பது,  கோயில்களில் உண்டியலை உடைத்து பணம், நகைகளை கொள்ளை அடித்து செல்வது என கடந்த இரண்டு மாதங்களாக அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.


இந்நிலையில் அரியலூர் மாவட்ட மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், அதே சமயம் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரி மற்றும் திருச்சி மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தின் முந்திரி காட்டில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் கோவில் உள்ளது. சக்தி வாய்ந்த கோவிலாக கருதப்படும் இந்த கோவிலை பல்வேறு கிராம மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த வெண்கல மணிகள் மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.




இந்த நிலையில் பரணம் கிராமத்தில் சாக்கு மூட்டையுடன் சந்தேகத்திற்குரிய வகையில் 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தாங்கள் மாங்காய் பறிக்க வந்ததாக கூறினர். 


இதனைதொடர்ந்து அந்த வாலிபர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அதில் 7 கோவில் மணிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 வாலிபர்களையும் இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் உடையார்பாளையம் காலணி தெருவை சேர்ந்த ஆதிஷ் (வயது 18), நிர்மல்ராஜ் என்கிற நந்தா (18), பரமசிவம் (24) என்பதும் அவர்கள் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் வெண்கல மணிகளை திருடியதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து 7 வெண்கல மணிகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவர்களை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண