பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்  என்ற நிகழ்ச்சியை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடத்தியது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆசிரியர்களிடையே பேசியதாவது:- "ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்டத்தில் தனி அலுவலகம் அமைத்து "ஆசிரியர் மனசு" என்ற பெட்டி வைக்கப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் மனசு என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை எண் 101 மற்றும் 108 குறித்த கோரிக்கைகளை மிக விரைவில் வருகிற 10-ந் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு முன்பாகவே முடித்து விட வேண்டும் என்பதன் அடிப்படையில் கோப்புகளை தயார் செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்






சிறப்பான தேர்வு முடிவுகளை கொடுத்து தமிழ்நாட்டிற்கு முன்னோடி மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்களை பார்த்து மற்ற மாவட்ட ஆசிரியர்களும் தங்களது மாவட்டம் முன்னுக்கு வருவதற்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 




முன்னதாக அவர் 2021-22-ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். இதில் பிரபாகரன் எம்.எல்.ஏ., வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், கல்லூரி செயலாளர் நீல்ராஜ், தேசிய நல்லாசிரியர் தங்கம்மூர்த்தி, ஆசிரியர் சதீஷ்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம் நன்றி கூறினார்.  இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், போக்சோ சட்டத்தில் கைதான கரூர் மாவட்டம், பொம்மாநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மீது முதன்மை கல்வி அதிகாரியின் அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும். ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி மேம்படுத்தப்படும், என்றார். தொடர்ந்து அவர் ஆசிரியர்களுடன் உணவருந்தி கலந்துரையாடினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண