பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக மக்களுக்கு வழங்குவது இல்லை என தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளபட்டி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் சுமார் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த கடையின் விற்பனையாளர் ராஜா கடையை திறந்து வைத்து மண்ணெண்ணெய் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பூமிதானம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான நடேசன் (வயது 45) என்பவர் அங்கு வந்து எனது குடும்ப அட்டைக்கு அரிசி கொடுங்கள் என கேட்டுள்ளார். அப்போது விற்பனையாளர் ராஜா இந்த மாதம் வந்த அரிசி முழுமையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. உங்களுடன் சேர்த்து 8 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைவாக வந்துள்ளது. இதனை அடுத்த மாதம் முன்னுரிமை அடிப்படையில் முதலில் உங்களுக்கு வழங்குகிறோம். அப்போது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.
மேலும் இதை ஏற்க மறுத்து ஆத்திரம் அடைந்த நடேசன் இப்போதே எனக்கு அரிசி வழங்க வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் யாருக்கும் எந்த பொருளும் வழங்கக்கூடாது எனக்கூறி விற்பனையாளரான ராஜாவை உள்ளே வைத்து ரேஷன் கடையின் கதவை இழுத்துப் பூட்டி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ரங்கராஜ் மற்றும் அரும்பாவூர் போலீசார் கடையை பூட்டிய நடேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அரிசி வந்தவுடன் உங்களுக்கு முதலில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்கள். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை நடேசன் கைவிட்டார். அதன் பின்னர் ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்