பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் 9-வது வார்டுக்கு உட்பட்ட ரெங்கம்மாள் நகர், அவ்வை தெருவை சேர்ந்தவர் கலைவாணன் (வயது37). பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் கணினி பிரிவில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் குடும்பத்துடன், அதே பகுதியில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார். ஜெயராமன் துபாயில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருவதால், பெரம்பலூரில் உள்ள வீட்டில் திவ்யா(34) தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி திவ்யா வீட்டை பூட்டிவிட்டு திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, நெய்குளத்தில் உள்ள தனது அண்ணன் பொய்யாமொழி வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி, 2 குழந்தைகளுடன் திருச்சியில் உள்ள மாமனார் வீட்டிற்கு கலைவாணன் சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று வேலைக்கு செல்வதற்காக அவர் மட்டும் திருச்சியில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்தார். அப்போது வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் 1.15 மணிக்கு கலைவாணன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் சாவியால் திறக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.47 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கேமரா ஒன்று ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் உடனடியாக தரைதளத்தில் உள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கேயும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கலைவாணன் இதுகுறித்து திவ்யாவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரும் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டிலும் பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 28 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம், 4 ஜோடி வெள்ளிக்கொலுசுகள், 2 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து கலைவாணனும், திவ்யாவும் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் கடந்த சில நாடகளாக பெரம்பலூர் மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பயத்துடன் வாழ்ந்து வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வீட்டில் யாரும் இல்லாமல் இருப்பதை நன்கு கண்காணித்து பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆகையால் பொதுமக்களின் பாதுகாப்பை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்து, குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்