பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் வழியாக சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், லாடபுரம் அம்பேத்கர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டனர். அதில் மூட்டை, மூட்டையாக இருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்துடன் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த தாசில்தார் கிருஷ்ணராஜ், அவற்றை பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார், அந்த சரக்கு வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அதம்பார் அருகே உள்ள படுகை கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் பாரதிவேல் (வயது 27), அவரது தம்பி பாரதி முருகன் (23) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்திற்கு சரக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு வெறும் வாகனமாக செல்லக்கூடாது என்பதற்காக பெரம்பலூர் மாவட்ட பகுதியில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை, சரக்கு வாகனத்தில் ஏற்றி நாமக்கல் கோழி பண்ணைக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாரதிவேல், பாரதி முருகன் ஆகியோரை கைது செய்தனர். ரேஷன் கடையில் விலையில்லா அரிசியை பெற்று விற்று வருபவர்கள் யார்? ரேஷன் அரிசியை வாங்கும் வியாபாரிகள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரிப்பதோடு, அவர்களையும் தேடி வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தது . இதனை தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த மார்ச் மாதம் பெரம்பலூர் 13-வது வார்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த காந்தி மகன் செல்வம் (வயது 30) என்பதும், அவர் ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்கு கடத்தி சென்றார். பின்னர் காவல்துறையினர் செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 450 கிலோ இலவச ரேஷன் அரிசியையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது. இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்