அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதாகவும், சிலர் பைக் ரேஸிசில் ஈடுபடுவதாக பல்வேறு புகார் வந்தது. மேலும் சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் பொதுமக்களும், எதிரே வரும் வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்து வந்தனர். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்தநிலையில் கும்பகோணம் ரோடு புறவழிச்சாலை அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஷாஹிராபானு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில், அவர்கள் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என்பதும், லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.


இதனைதொடர்ந்து 3 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவர்களின் பெற்றோரை வரவழைத்து அவர்களுக்கு உரிய அறிவுரை கூறி அபராதம் விதித்தனர். இதேபோல் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கடந்த 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவித்தது.. 




அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தன. அதன்பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம். மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் இயக்கி வருகிறார்கள். இதேபோல் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், மதுபோதையில் சென்றவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இதன்காரணமாக அரியலூரில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குவது தற்போது குறைந்து உள்ளது. இருப்பினும் விபத்தை குறைப்பதாக இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


மேலும் அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனம் திருட்டு போவது அதிகரித்து வந்தது. குறிப்பாக பொதுமக்களும் அச்சத்தில் இருந்தனர், ஆகையால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கபட்டது எனவும் தெரிவித்தனர். குறிப்பாக தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண