திருச்சி மாநகர், மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் எல்பின் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இங்கு முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என்றும், நிலம் தருவதாகவும் என பல்வேறு போலியான வாக்குறுதிகளை அளித்தனர். இதை நம்பி முதலீடு செய்த பொதுமக்களிடம் பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இது தொடர்பாக எல்பின் இ-காம் பிரைவேட் லிமிடெட், ஸ்பாரோ குளோபல் டிரேட் திருச்சி, ஆர்.எம். வெல்த் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் கோவை, இன்பை கேலக்ஸி மார்க்கெட்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் சென்னை மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராக தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், கோவை மற்றும் சென்னை ஆகிய 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த காலகட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தது. மேற்கூறிய நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்தப்படாத, முறைப்படுத்தப்படாத வைப்புத்திட்டங்கள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றி வந்தனர். இந்தநிலையில் ஆர்.எம். வெல்த் கிரியேஷன் நிறுவனத்துக்கு எதிராக 2013-ம் ஆண்டு விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் பதியப்பட்ட மோசடி வழக்கானது மதுரை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.




 

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நிர்மலா (வயது 42) என்பவர் பல ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவருக்கு மதுரை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தால் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிர்மலா வெளிநாட்டில் இருந்ததால் அவருக்கு காவல்துறை சார்பில் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் லுக்அவுட் நோட்டீசு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இங்கிலாந்து நாட்டில் இருந்து சென்னை விமானநிலையத்துக்கு வந்த நிர்மலாவை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவர் மீதான கைது வாரண்டை நிறைவேற்றும் பொருட்டு அவரை மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நிர்மலா எல்பின் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜா என்கிற அழகிரிசாமியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண