திருச்சி மாவட்டம் லால்குடி வெள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (28). இவர் டால்மியாபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சற்று வறுமையில் வாடிய அவர் கடன் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு கடன் வேண்டுமானால் இந்த செயலியை பதவிறக்கம் செய்யுங்கள் என்ற குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி சுரேஷ்குமார் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளார். நேரில் வரவேண்டாம், அந்த செயலி மூலமாகவே பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று குறுந்தகவல்கள் தொடர்ந்து வந்தன. இதை நம்பிய சுரேஷ்குமார் உடனடியாக அந்த செயலியை பயன்படுத்தி அதன் மூலமாக கிடைத்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு சுரேஷ்குமார் பேசியுள்ளார். எதிர்முனையில் பேசியவரிடம் 3500 ரூபாய் கடன் வேண்டுமென கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த நபர், வங்கி விவரம் மற்றும் ஆதார் விவரம் அனைத்தையும் பெற்றுக் கொண்டு 2500 ரூபாய் அனுப்பியுள்ளார். பின்னர் சில தினங்களில் வாங்கிய அசல் தொகையை விட வட்டித்தொகை அதிகமாக செலுத்துவதற்கு சுரேஷ்குமாரை செயலி மூலமாக மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
மேலும் கூடுதல் வட்டியுடன் கடன் தொகையை செலுத்தவில்லை என்றால் தங்களின் புகைப்படங்கள் ஆபாசமாக நாங்கள் மார்பிங் செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம். அதனை வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று கூறி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போய் சுரேஷ்குமார் ரூ.2,500 கடனுக்கு ரூ.4,000 வரை செலுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பணத்தை செலுத்த முடியாமல் சுரேஷ்குமார் தவித்துள்ளார். அப்போது சுரேஷ்குமாரின் செல்போனில் இருந்து வாட்ஸ்அப் எண்களை திருடிய மர்ம நபர்கள் சுரேஷ்குமாரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனைவருக்கும் அனுப்பி உள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் குமார் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சுரேஷ்குமாரை தொடர்பு கொண்ட தொலைபேசி எண்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்ததாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. மேலும் தமிழ்கத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் செயலி கடன் தரப்படும் என குறுஞ்செய்தியை பொதுமக்கள் நம்பி ஏமாந்து வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு கடன் தேவைபட்டால் நேரடியாக வங்கிற்கு சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தாமல் இருக்க சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.