அரியலூர் மாவட்டத்தில் திமுக கட்சியின் பொது உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து மக்களுக்கு செய்து வரும் திட்டங்களை குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக ஏழை, எளிய பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், காலை உணவு திட்டம், விளையாட்டு துறைகளை மேம்படுத்த திட்டம், நகரப்புற வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டம் , மகளிருக்கு இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் முறைப்படி பொதுமக்களை சென்றடைவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் சாலைகள் மேம்படுத்துவது, பள்ளி கட்டிடங்கள் புதிதாக கட்டுவது , பேருந்து நிலையங்களில் முழுவதும் சீரமைத்து பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்குவது, ஏரி, குளங்கள் தூர் வாருவது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள் வழங்குவது மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது என பல்வேறு திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பொய்யான பரப்புரையை பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார்கள். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு நன்றாக தெரியும் மக்களுக்கான ஆட்சி திமுக தான் என்று.
ஆகையால் நமது மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்பாகவும், ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். திமுக ஆட்சியில் அரியலூர் மாவட்டம் சிறந்த மாவட்டமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி நமது ஆட்சியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் இன்று வரை மின்சார வசதி இல்லாமல் 40 சதவீத குடும்பங்கள் உள்ளது.
இதேபோல் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. இதற்கு காரணம் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி ஆவார். அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழகம் வளா்ச்சிப் பெற்றுள்ளது. எனவே திராவிட மாடல் ஆட்சி தொடர, வரும் சட்டப்பேரவை தோ்தலில் கட்சியினா் தீவிர களப் பணியாற்ற வேண்டும்.
அரியலூரில் கருணாநிதியின் முழு உருவச் சிலை வைக்கவும், அறிவாலயம் கட்டவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்துக்கு அக்கட்சியின் சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா. சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாநில கொள்கைப் பரப்பு துணை செயலா் பெருநற்கிள்ளி, தலைமைக் செயற்குழு உறுப்பினா் பாலசுப்ரணியன், முன்னாள் எம்எல்ஏ அமரமூா்த்தி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
அரியலூா் நகரச் செயலா் முருகேசன், துணைச் செயலா்களில் சந்திரசேகரன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.