அரியலூரில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில்  நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறை அமைச்சா் சி.சிவசங்கா் கலந்துக்கொண்டார். 


மேலும் டாக்டா். கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில், அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கினார். 


பின்பு மேடையில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியது.. 


தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.


குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் என கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டில் இருக்கும் குழந்தைகள் கல்வியில் உலக அளவில் திறந்து விளங்க வேண்டும் என நோக்கத்தோடு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.


அதேபோன்று விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் உலகளவில் நடை பெறக்கூடிய விளையாட்டுகளில் பங்கேற்று சிறந்து விளங்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.




மேலும், கல்வியில் தமிழகம் உயா்ந்து வருவதை போலவே, விளையாட்டிலும் மாணவ, மாணவிகள் சாதனைகள் புரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.


கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து செயல்பட்டால் எதிா்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், வேலைவாய்ப்பை பெறுவதற்கும் அடிப்படையாக இருக்கும் என தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியது...


எங்களை போன்ற தொண்டா்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று காத்திருக்கிறோம். முதல்வா் ஸ்டாலின் தான் முடிவு செய்வாா்.




எடப்பாடி பழனிசாமி அடிப்படை அரசியல் கூட தெரியாமல் முதல்வரானவா். நாணயம் வெளியீடு என்பது ஒரு அரசு விழா. இது, மத்திய, மாநில அரசுகள் இணைந்த பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. திமுக சாா்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சி தலைவா்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.


மேலும், ஆளுங்கட்சியை எல்லோரும் விமா்சிப்பது வழக்கம், குறிப்பாக ஆளும்கட்சியை குறித்து தரக்குறைவான விமா்சனங்களை பேசினார்கள். ஊடகங்களில் வெளி வரும் என்பதற்காக பேசுகிறார்கள். அவா்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவாா்கள். 


திமுக அரசு என்பது மக்களுக்கான ஆட்சியை வழங்கி வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து அனைத்து திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு எப்போதும் திமுக அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்ட பேரவை உறுப்பினா் கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத்திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலா் லெனின், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், திருமானூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி அசோக சக்கரவா்த்தி, வாலாஜாநகரம் ஊராட்சித் தலைவா் அபிநயா இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.