திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் (National College), "விளையாட்டில் மறுமலர்ச்சி" என்கிற தலைப்பில் 4 நாட்கள் நடைபெறவுள்ள பன்னாட்டு கருத்தரங்கை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பன்னாட்டு கருத்தரங்கை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒருங்கிணைத்திருந்தார். இதில் கலந்துகொள்வதற்காக  சென்னையிலிருந்து திருச்சி வந்த உதயநிதி ஸ்டாலின், திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் தலைவர் கருணநிதியின் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி பங்கேற்றார். இதில் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ், மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு கூறுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உரிமையோடு தம்பி என்றே அழைப்பேன். உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை விளையாட்டுத் துறையை மட்டுமல்லாமல் எல்லா துறைகளையும் கண்காணித்து வருகிறார். குறிப்பாக அவருக்கு கொடுக்கபட்ட துறையில் மிக சிறப்பாக செயல்பட்டு, பல அற்புதமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உலகளாவிய விளையாட்டு போட்டிகளை நமது தமிழ்நாட்டில் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார்.




குறிப்பாக நீட் தேர்வை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் கடும் முயற்சிகள் எடுத்து வருகிறார். குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார் எனவும் புகழ்ந்து பேசினார்.


குறிப்பாக  திருச்சியில் சர்வதேச அளவிலான ஒலிம்பிக் அகடாமி அமைக்கும் திட்டத்தை அறிவித்து திருச்சியை தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரமாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின அவார். ஆகையால் திருச்சியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஒலிம்பிக் அகாடமி அமைக்க 50 ஏக்கர் நிலத்தை தயார் செய்து கொடுத்ததை போல், விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கவும் நாங்கள் இடம் கொடுக்கத் தயார் எனத் தெரிவித்தார். இதற்கு அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார். 


திறமை இருந்தால் மேலே வந்துவிடலாம் என்கிற துறை விளையாட்டுத்துறை மட்டும் தான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலத்தில் தமிழக கிராமப்புற விளையாட்டு வீரர்கள் உலகளவில் பெயர் பெற வேண்டும் என தாம் விரும்புவதாக அமைச்சர் நேரு கூறினார். விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு அரங்கங்கள் என எவ்வளவோ உங்கள் துறைகளில் செய்து வருகிறீர்கள் என உதயநிதியை புகழ்ந்து பேசினார்.