திருச்சியா... மினி சென்னையா: சடசடவென்று முன்னேறுது... அரசின் அடுத்த அறிவிப்பால் இளைஞர்கள் மகிழ்ச்சி

தமிழக அரசின் கடைக்கண் பார்வை இல்லைங்க... நேரான பார்வையே திருச்சிமீதுதான் இப்போ இருக்கோ என்று அனைத்து தரப்பு மக்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏராளமான திட்டங்கள்.

Continues below advertisement

திருச்சி: திருச்சியா... மினி சென்னையா என்று கேட்கும் அளவிற்கு கிடுகிடு வளர்ச்சியை நோக்கி சடசடவென்று முன்னேறுகிறது திருச்சி. தமிழக அரசின் திட்டங்கள் இப்போ திருச்சியின் நிறத்தையே மாற்றி வருகிறது. என்ன விஷயம் தெரியுங்களா? ரூ.290 கோடியில் அமையும் கலைஞர் நூலகம்தான். 

Continues below advertisement

தமிழக அரசின் கடைக்கண் பார்வை இல்லைங்க... நேரான பார்வையே திருச்சிமீதுதான் இப்போ இருக்கோ என்று அனைத்து தரப்பு மக்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்து பிரமிக்க வைச்சிருகாங்க. பஞ்சப்பூரில் பேருந்து முனையம், டைடல் பார்க், காய்கறி சந்தை, பெரிய அளவிலான புட் கோர்ட் என்று அடுத்தடுத்த வளர்ச்சியால் திருச்சி மக்கள் உச்சி குளிர்ந்து போய் உள்ள நிலையில்தான் வந்தது அடுத்த அறிவிப்பு. திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

ஏற்கனவே புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படவுள்ள நிலையில், டைடல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் திருச்சி மாவட்டம் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி கிடுகிடுவென வேகமாக பயணித்து வருவதாக பார்க்கப்படுகிறது. மதுரை புதூர் பகுதியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை விரிவுப்படுத்தும் வகையில் கோவை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டது. நிறம் மாறுது திருச்சி... இப்போ வந்திடுச்சு லைப்ரரி என்று மக்கள் பாட்டாக பாடாத குறைதான்.

அதிலும் திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நூலகம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், அதன் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் திருச்சிக்குதான் முதலிடம் என்றால் மிகையில்லை.

ஏற்கனவே புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து இன்னும் சில வாரங்களில் திறக்கப்படவுள்ள நிலையில், அடுத்ததாக பஞ்சப்பூர் பகுதியில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கான பணிகளை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சென்னையில் இருந்து வீடியோ வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இதற்காக ரூ.290 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. தரை தளம் உட்பட மொத்தமாக 7 தளங்களை கொண்ட கட்டடமாக அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கான டெண்டர் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. திருச்சியில் அமையவுள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் அறிவியல் மையம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் பாட புத்தகங்கள் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் பல்நோக்கு கூடம், ரோபோட்டிக்ஸ் மற்றும் விளையாட்டு பகுதி, டிஜிட்டல் நூலகம், ஆங்கில நூலகம், அறிவு சார் மையம் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.

மேலும், இரண்டு முதல் ஏழு தளங்களுக்கு செல்லும் வகையில் மின் தூக்கி சேவைகளும் அமைக்கப்பட உள்ளது. இதன் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மதுரை கலைஞர் நூலகம் கட்டடப் பணிகள் விரைவாக நடத்தி திறந்து வைக்கப்பட்டன. அதேபோல் திருச்சியில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூலகம் மாணவர்கள், இளைஞர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மிகப்பெரிய பயனளிக்கும் என்ற மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது. கொளுத்தும் கோடை வரப்போகும் இந்த நேரத்தில் சும்மா ஜில்லுன்கு திருச்சியையே குளிர்வித்து இருக்கிறது இந்த திட்டமும், அடிக்கல் நாட்டு விழாவும்.

Continues below advertisement