திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசிநேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்களை போட்டி நடத்தப்படும் 15 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழா உள்ளிட்ட போட்டிகளை நடத்தும் விழா குழுவினர் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண்: 7 2017-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி போட்டியை நடத்த வேண்டும். அரசிடம் முன்அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற கிராமங்களில் மட்டுமே தற்போது போட்டி நடத்தப்பட வேண்டும். 




 

அரசாணை வெளியிடப்படாமல் கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வேண்டுமெனில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதற்கான புகைப்படங்கள், நாளிதழ்களில் வரப்பெற்ற செய்தி, கல்வெட்டு மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் போன்ற ஆதாரங்களுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெறும் காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் அதன் உதவியாளர் ஒருவர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள் போட்டிகளில் பங்கேற்கும் முன்பு அதன் உரிமையாளர் கண்டிப்பாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றினை சமர்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் காளை பங்கேற்று முடிந்த பிறகு அதன் உரிமையாளர் காளையினை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். 

 



 

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை பங்கேற்று முடிந்தபிறகு அதன் உரிமையாளர்கள் கண்டிப்பாக காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற்ற காளைகளுக்கு போதிய அளவு ஓய்வுஅளித்து காளைகளை உடனடியாக வீடுகளுக்கு அழைத்து செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தும் விழாக்குழுவினர் மற்றும் போட்டியில் பங்குபெற காளைகளை அழைத்து வரும் காளையின் உரிமையாளர் மற்றும் போட்டியில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகளும் செலுத்தி இருக்க வேண்டும். மேலும், விழாவில் பங்கு பெறுவோர் கொரோனா பரிசோதனையினை விழா நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பு மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றினை மருத்துவக்குழுவினரிடம் வழங்க வேண்டும். அரசிடமிருந்து முன்அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி உறுதிமொழிகளுடன் போட்டி நடத்த உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.