திருச்சி மெயின் கார்டு பகுதியில் உள்ள Holy Cross College 100 வது ஆண்டை கொண்டாடும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டது. இதில் பலவிதமான விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் மிகுந்த உற்சாகமாக கலந்துக்கொண்டனர். பின்பு இன்று மாலை 100 வது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், திருச்சி மேயர் அன்பழகன், மாநகர காவல்துறை ஆணையர் காமினி, மற்றும் கல்லூரி முதல்வர் இஸபெல்லா ராஜகுமாரி மற்றும் ஆசியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு மேடையில் பேசியதாவது: மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளை கண்டு கழித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாட்டு பள்ளி கல்வி துறைக்கு பெருமை சேர்க்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்.
திருச்சிக்கு பல பெருமைகள் உண்டு, குறிப்பாக ஜோசப் கல்லூரி, அமெரிக்கன் கண் மருத்துவ மனை போன்ற பல்வேறு சிறப்புகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த கல்லூரி . திருச்சியில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் கிறிஸ்தவர்கள். கிராமப்புறங்களில் சிறுவயதில் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகளை நினைவூட்டும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விளையாட்டு தற்போது நகரப்புறங்களில் உள்ளவர்களுக்கு தெரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி கூறியதாவது: கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இதற்காக நீங்கள் அனைவரும் பலமுறை வகுப்பறையை cut அடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுடைய தொடர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த கலை நிகழ்ச்சியில் வெற்றி ஆகும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் என்னை மீண்டும் கல்லூரி காலத்திற்கு அழைத்து சென்று அந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. திருச்சியில் நடைபெறக்கூடிய கல்லூரி நிகழ்ச்சியில் நிச்சயமாக நீ கலந்து கொள்ள வேண்டும், என உத்தரவிட்டு என அழைத்து வந்ததற்கு அன்பில் மகேஷ் அவர்களுக்கு நன்றி. 1924 ஆண்டு கலைஞர் பிறந்தார், அவருக்கு ஓர் ஆண்டு முந்தையதாக இக்கல்லூரி பிறந்தது. திராவிட மாடல் கொள்கையை முழுமையாக இக்கல்லூரி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பெண்கள் கல்வியை கண்டிப்பாக கற்க வேண்டும் இந்த சமுதாயத்தில் அவர்கள் தனித்து நிற்க வேண்டும் என மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பார், அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்தார். வீட்டில் குழம்பு கரண்டியை பிடித்த பெண்கள் கையில் புத்தகத்தை கொடுத்தவர் கலைஞர் அவர்கள். 100 ஆண்டுகள் தொடர்ந்து கல்வியை சேவை செய்வது சாதாரண காரியம் இல்லை.
மேலும் பெண்களுக்கு திருமண உதவித்தொகை, குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டில் பெண்கள் மேயராக, கவுன்சர்களாக செயலாற்றி வருகிறார்கள். குறிப்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம் பெண்களால்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு துறையில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வருகிறோம். குறிப்பாக தற்போது விளையாட்டு துறையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழ்நாட்டில் தேசிய அளவிலான போட்டிகள் சர்வதேச அளவிலான போட்டிகளை தொடர்ந்து நாம் நடத்தி வருகிறோம் இதனை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவிலான பல போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு எப்போதும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும். அதேபோன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்ந்து கல்வி சேவை செய்து வரும் கல்லூரிக்கும் மாநில அரசு துணை நிற்கும் என்றார்.