திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தில்லை நகர் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்றம் அருகில் எம்ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் வேகத்தை குறைப்பதற்காக பணியில் இருந்த டிரைவர் சகாய சவுரிமுத்து பிரேக்கை காலால் அழுத்தினார். ஆனால் பேருந்தின் வேகம் குறையாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பிரேக் மீது ஏறி நின்று பார்த்தும் பஸ் நிற்கவில்லை. இதற்கிடையே முன்வரிசையில் அமர்ந்து பயணித்த டிரைவரின் செயல்பாட்டால் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். அப்போது கண்டக்டர் அருகில் வந்து விபரம் கேட்டபோதுதான், பேருந்தில் பிரேக் செயலிழந்து விட்டதாகவும், பேருந்தை நிறுத்த முடியவில்லை என்ற தகவலும் கிடைத்தது. இதைக்கேட்ட பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சென்று கொண்டிருந்த பேருந்து என்ன ஆகப்போகிறதோ, எப்படி நிற்கப்போகிறதோ என்ற திக், திக் மனதுடன் உயிரை கையில் பிடித்தவாறு பயணிகள் அமர்ந்திருந்தனர். இதற்கிடையே ஒருசிலர் பேருந்தில் இருந்து குதிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மேலும் பலர் பேருந்தின் பின் பகுதிக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் பயணிகளுக்கு தைரியம் கூறிய டிரைவர் சகாய சவுரிமுத்து, பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அதே வேளையில் சாலையில் சென்று கொண்டிருப்போர் மீது மோதாமல் இருக்கும் வகையிலும் கோர்ட்டு அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவின் சுவற்றில் மோதி பஸ்சை நிறுத்தினார். இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் இரண்டு பயணிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு சிறுசிறு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் பஸ்சை மீட்டு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்