திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி. கார்த்திக்கேயன் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. மேலும் மத்திய மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ஜி. கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார். ஆகையால் காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து வருகிறார்கள். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்- கார்த்திக்கேயன் உத்தரவின்படி.. திருச்சி மத்திய மண்டலத்தில் 2023ம் ஆண்டில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் விவரம் அனைத்து மாவட்டங்களிலும் சேகரிக்கப்பட்டு, அத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டது. 




இதனை தொடர்ந்து  காவல் ஆய்வாளர்கள் ரவுடிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது நேரில் ஆஜர் ஆகுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் பிடி கட்டளை நிலுவையில் இருந்த ரவுடிகள் விவரம் சேகரிக்கப்பட்டு, சிறப்பு தனிப்படை மூலம் பிடிகட்டளைகள் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ரவுடிகள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆவது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு 45 கொலை வழக்குகள் உட்பட 26,234 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. ரவுடிகளின் சட்டவிரோத செயல்களை முடக்கவும். அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து தண்டனை பெற்றுத் தரவும், காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் ஐஜி.கார்த்திக்கேயன் அவர்கள் அறிவுரையின் பேரில், நீதிமன்ற விசராணையில் இருந்த கொலை வழக்குகள் மீது துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் நேரடியாக வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி  18 கொலை குற்ற வழக்குகள், அரசு தரப்பால் விரைவாக முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ரவுடிகளுக்கு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.


மேலும், நீதிமன்றத்தில் ரவுடிகள் மீதான வழக்கு விசாரணையில் தனிக்கவனம் செலுத்தி குறிப்பாக கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திக்கேயன் தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். மேலும், பிற வழக்குகளிலும் விரைந்து தண்டனை பெறுவதற்கு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.