திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மணிப்பூர் விவகாரத்திற்கு பிரதமர் பதில் கூற வேண்டும் ? மணிப்பூர் சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று நாட்டு மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் உள் துறை அமைச்சர் அமித்ஷா தார்மீக பொறுப்பேற்று ராஜினமா செய்ய வேண்டும். பிரதமர் நாடாளுமன்றத்திற்கு ஏன் போகவில்லை ? வெளி நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களில் பேசும் மோடி நம் நாடாளுமன்றத்தில் ஏன் பேசுவதற்கும், பதில் கூற பயப்படுகிறார். நாளைய தினம் நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தூய்மை பாணியாளர்களுக்கு கொரோனோ காலத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்கு சம்பளம் மிக மிக குறைவு, துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்வு செய்ய தமிழக அரசு வழிவகை செய்து தர வேண்டும் என்றார். மேலும் வேங்கைவயல் விவாகரத்தை பற்றி தமிழகத்தில் உள்ள கட்சிகள் பேசவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, அவருக்கு காது கேட்காது, கொஞ்சம் கண் பார்வை கூட மந்தம், வேங்கைவயல் விவகாரம் குறித்து அனைத்து கட்சிகளுமே தமிழகத்தில் கேள்வி எழுப்பி உள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசியவர், “மணிப்பூர் பிரச்சினை பொறுத்து வரை பிரச்சினையை சரி செய்ய பா.ஜ.க எந்த முயற்சியும் செய்யவில்லை. குஜராத்தில் எப்படி கலவரத்தை நடத்தி அரசியல் ஆதாயம் பெற்றார்களோ? அதேபோல் மணிப்பூரில் தற்போது கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். பெங்களுருவில் தக்காளியை வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி ஒருவர் திருடி வந்து விற்பனை செய்து வந்துள்ளார். மேகதாதுவை பொறுத்தவரை தமிழக அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே அங்கு அணை கட்ட முடியும், அதே நேரம் மத்திய அரசு மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது. தமிழகத்தில் எல்லா அரசு துறைகளிலும் காலி பணியிடங்கள் உள்ளது . காலி பணியிடங்களை நிரப்புவதால் புதிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் அதே போல் ஏற்கனவே பணி அழுத்தத்தில் உள்ள பணியாளர்களுக்கு சுமை குறையும். தமிழக அரசு காலி பணியிடங்களை கட்டாயம் நிரப்ப வழிவகை செய்ய வேண்டும். குடும்ப தலைவிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று சொன்னது உன்மை தான் ? ஆனால் ஒரு முறையை பின் பற்றி தான் ஆக வேண்டும். அது எந்த திட்டமாக இருந்தாலும் சரி. ஒரு வேளை இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கண்டிப்பாக அதனை நாங்கள் அரசிடம் கோரிக்கையாக முன் வைப்போம்” என்றார்.